Published : 23 Jun 2014 08:40 AM
Last Updated : 23 Jun 2014 08:40 AM

‘மக்களுக்கு போர் அடிக்காமல் செய்தால் எந்தப் படமும் வெற்றியடையும்’

முதல் படத்தை இயக்கும் இயக்குநர்கள், பெரும்பாலும் தாங்கள் காலம் காலமாக மனதில் உருவாக்கி வைத்திருக்கும் கதைகளையே படமாக்குவார்கள். ஆனால் ‘ஆள்’ படத்தை இயக்கும் ஆனந்த் கிருஷ்ணன், கொஞ்சம் வித்தியாசமாக இந்தியில் வெளியான ‘ஆமிர்’ படத்தை ‘தமிழில் ரீமேக் செய்கிறார். படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ள அவரைச் சந்தித்தோம்.

முதல் படமாக ஏன் ஒரு இந்தி படத்தை ரீமேக் செய்கிறீர்கள்?

‘ஆமிர்’ ஒரு கிளாசிக்கான படம். அதே நேரத்தில் இந்தப் படத்தை தமிழில் எப்படியெல்லாம் மாற்றிப் பண்ணலாம் என்று நினைத்ததால்தான் இதை முதல் படமாகச் செய்கிறேன். இது ரீமேக் படமாக இருந்தாலும் அரை மணி நேரத் திற்கான கதையை நான் சேர்த்திருக்கிறேன். ‘ஆமிர்’ படத்தில் எதையெல்லாம் நான் சர்ச்சையாக நினைத்தேனோ அதையெல்லாம் மாற்றியிருக்கிறேன். இந்தியில் இது மக்களுக்கான படம் இல்லை. நான் இதை மக்களுக்கான படமாக மாற்றியிருக்கிறேன்.

இந்தியில் இந்தப் படம் மக்களிடம் போய் சேரவில்லை என்கிறீர்கள். அப்படி இருக்கும்போது தமிழில் இதை எப்படி நம்பிக்கையுடன் இயக்குகிறீர்கள்?

எந்த ஒரு இடத்திலும் மக்களுக்கு போர் அடிக்காமல் செய்தால் எந்தொரு படமும் வெற்றியடையும் என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் நான் இப்படத்தை இயக்குகிறேன். எல்லாரோட வாழ்க்கையிலும் ஒரு மோசமான நாள் வரும். அது அந்த மனுஷனோட கடைசி நாளாகக்கூட இருக்கலாம் அல்லது ஒரு முக்கியமான நாளாக இருக்கலாம். அந்த நாளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கி வருகிறேன்.

வேஷ்டி, சட்டைனு சுத்திக்கிட்டு இருந்த விதார்த்துக்கு இந்த படத்துல கோட் சூட் எல்லாம் போட்டு விட்டிருக்கீங்களே?

விதார்த்திற்கு இந்த படத்தில் ஸ்டைல் எல்லாம் கிடையாது. அவர் ஒரு சாதாரண மனிதராக நடித்துள்ளார். ஒரே ஒரு விஷயம் இந்தப் படத்தில் அவர் லுங்கிக்கு பதிலாக கோட் அணிந்திருப்பார் என்பதுதான். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் வில்லனாக இதன் தயாரிப்பாளரே நடிக்கிறாராமே?

ஆமாம். அவருடனான ஒரு சந்திப்பில் அவருக்கு நடிக்க ஆசை இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் எனக்கும் ஒரு புதுமையான வில்லன் தேவைப்பட்டார். அதனால் அவரையே வில்லனாக போட முடிவு செய்தேன். ஷூட்டிங் போகும்வரை அவரிடம் இதைச் சொல்லவில்லை. கடைசி நேரத்தில் சொல்லி சம்மதிக்க வைத்தோம்.

பொதுவாக ஒருவர் இயக்குநர் ஆவதற்கு நிறைய காலம் ஆகும் என்பார்கள். நீங்கள் 24 வயதிலேயே இயக்குநராகி விட்டீர்களே?

நான் 19 வயதிலேயே உதவி இயக்குநராக சேர்ந்துட்டேன். எனக்கு தெரிந்து சின்ன வயதில் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். இயக்குநராக இருந்த திருப்பதிசாமி என் மாமா. நான் 8-ம் வகுப்பு படிக்கும் போதே அவர் இறந்துட்டார். அப்போதில் இருந்தே, நாமளும் இயக்குநராகணும் என்ற வெறி எனக்குள் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போதே நான் கலை நிகழ்ச்சிகளை முன்னின்று செய்து கொடுப்பேன். பிறகு சுசி கணேசன் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்துகொண்டேன். உழைப்பு, காட்சி அமைக்கும் விதம் எல்லாவற்றையும் அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x