Published : 28 Apr 2021 02:24 PM
Last Updated : 28 Apr 2021 02:24 PM

'இந்தியன் 2' திரைப்பட விவகாரம்; இயக்குநர் ஷங்கர் - லைகா நிறுவனம் இடையிலான சமரசப் பேச்சு தோல்வி: உயர் நீதிமன்றத்தில் தகவல்

இயக்குநர் ஷங்கர்: கோப்புப்படம்

சென்னை

'இந்தியன் 2' படத் தயாரிப்பு விவகாரம் தொடர்பாக, இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இடையிலான சமரசப் பேச்சு தோல்வியடைந்து விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல், பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண அறிவுறுத்தியது.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஏப்.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ''கடந்த சனிக்கிழமை இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அதைத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது'' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x