Published : 19 Apr 2021 03:56 PM
Last Updated : 19 Apr 2021 03:56 PM
புதிய ஊரடங்கு அறிவிப்பால் தமிழில் வெளியாகவிருந்த பல திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கே நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதில் திரையரங்குகளில் 50 சதவித இருக்கைகளுடன் தினசரி 3 காட்சிகள் மட்டும் அனுமதி, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இப்படி குறைந்த இருக்கை அனுமதியுடன் தினமும் 3 காட்சிகள் மட்டுமே எனும் போது அது லாபகரமாக இருக்காது என்று புதிய படங்களின் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் நினைக்கின்றனர். இதனால் ஊரடங்குத் தளர்வுகள் வரும் வரை புதிய படங்களை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே 'எம்ஜிஆர் மகன்' திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து 'லாபம்', 'தலைவி', 'ப்ளான் பண்ணி பண்ணனும்' உள்ளிட்ட திரைப்படங்களோடு மே மாதம் வெளியாகும் திரைப்படங்களும் தள்ளிப் போகலாம் என்று தெரிகிறது.
இன்னொரு பக்கம் இவ்வளவு கட்டுப்பாடுகளுடன், இருக்கும் படங்களை வைத்து திரையரங்குகளை நடத்துவது அதிக நஷ்டத்தையே தரும் என்பதால் தளர்வுகள் வரும் வரை திரையரங்குகளை மொத்தமாக இழுத்து மூடுவதே சரியாக இருக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு நினைப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூடிப் பேசி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.
கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 8 மாதங்கள் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT