Published : 08 Apr 2021 07:33 PM
Last Updated : 08 Apr 2021 07:33 PM
'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு எவ்வளவு நிறைவடைந்துள்ளது, எப்போது வெளியீட்டுத் திட்டம் உள்ளிட்டவை குறித்து கார்த்தி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காமல் படக்குழு காத்திருக்கிறது.
இந்நிலையில், 'சுல்தான்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் கார்த்தி - ராஷ்மிகா இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ வடிவில் பதிலளித்தார்கள். அதில் 'பொன்னியின் செல்வன்' குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் கார்த்தி.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
" 'பொன்னியின் செல்வன்' நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது மத்தியப் பிரதேசத்துக்குப் படப்பிடிப்புக்காகப் போயிருக்க வேண்டியது. கரோனா தொற்றுப் பிரச்சினையால் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. சென்னை அல்லது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்".
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், "உங்களுடைய அடுத்த படம் குறித்துச் சொல்லுங்கள்" என்று கார்த்தியிடம் ராஷ்மிகா கேள்வி எழுப்பினார்.
அதற்கு கார்த்தி அளித்த பதில்:
"எனது அடுத்த படம் மணிரத்னம் சாருடைய 'பொன்னியின் செல்வன்'தான். இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை, 2 பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார் எனப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 70 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
கரோனா பிரச்சினையால் படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். இது மிகப்பெரிய படம். இந்தக் கதையைத் தமிழ்த் திரையுலகம் கடந்த 60 ஆண்டுகளாகப் படமாக்க முயன்று வருகிறது. அது இப்போதுதான் நடைபெறுகிறது".
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT