Published : 04 Apr 2021 06:19 PM
Last Updated : 04 Apr 2021 06:19 PM
'ஆளவந்தான்' திரைப்படத்தை மீண்டும் மாற்றி எழுதி, எடிட் செய்து வெளியிடுவேன் என்று தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் 'ஆளவந்தான்'. இந்தப் படத்தின் கதை- திரைக்கதை- வசனத்தை எழுதியவர் கமல்ஹாசன். ஒரே நேரத்தில் இந்தியிலும் 'அபய்' என்கிற பெயரில் உருவான இந்தப் படம் வெளியான நேரத்தில் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்துத் தோல்வியடைந்தது.
ஆனால், காலப்போக்கில் இதற்கென தனி ரசிகர் கூட்டம் உருவாகி கல்ட் திரைப்படம் என்கிற நிலையை அடைந்தது. சிறந்த கிராஃபிக்ஸுக்கான தேசிய விருதைப் பெற்ற இந்தப் படத்தின் அனிமேஷன் காட்சியைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் க்வெண்டின் டாரண்டீனோ, அந்த பாதிப்பில்தான் தனது 'கில் பில்' படத்தில் அதேபோன்ற ஒரு காட்சியை வைத்ததாகக் கூறியது 'ஆளவந்தான்' படத்துக்குக் கூடுதல் பெருமையைத் தேடித் தந்தது.
ஆனால், சில வருடங்கள் கழித்து, இந்தப் படத்தின் மூலம்தான் பெரும் நஷ்டம் அடைந்ததாகவும், கமல்ஹாசனால் பல கோடி ரூபாயை இழந்ததாகவும் தாணு ஒரு வாரப் பத்திரிகையில் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ஒரு பேட்டியில், மீண்டும் 'ஆளவந்தான்' படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாக தாணு கூறியுள்ளார்.
" 'ஆளவந்தான்' சொன்ன கதை வேறு, எடுத்த கதை வேறு, வெளியான கதை வேறு. அது ஒரு குழப்பமான கதை. இரண்டே முக்கால் மணி நேரப் படம். 20 வருடம் கழித்து வர வேண்டிய கதையை அவர் முன்னரே சிந்தித்துவிட்டார். அந்தப் பரிசோதனை முயற்சியை அவரே தயாரித்திருக்கலாம். என்னைத் தயாரிக்க வைத்துவிட்டார். ஆனால், அந்த 'ஆளவந்தான்' படத்தை நான் மீண்டும் மாற்றி எழுதப்போகிறேன். நானே அந்தப் படத்தை எடிட் செய்து மீண்டும் வெளியிட்டு, ஒரு உச்சத்துக்குக் கொண்டு செல்வேன்" என்று தாணு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT