Published : 01 Apr 2021 06:05 PM
Last Updated : 01 Apr 2021 06:05 PM
ரஜினிக்கு ஏற்புடையது பால்கே விருது என்று பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரஜினியின் நண்பரும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கை:
"சூப்பர் ஸ்டாருக்கு தாதா சாகேப் பால்கே விருது. மூன்று தலைமுறைகளின் முடிசூடா மன்னனாகத் திகழும் எனதருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தமைக்கு உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். கலைஞன் என்பவன் மக்களைத் தன் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவனாக இருப்பது முக்கியம்.
எத்தனை காலகட்டங்களைக் கடந்தாலும், தன்னை இன்னமும் உச்ச நாற்காலியில் இருத்தி வைக்க எவ்வளவு உழைப்பு வேண்டுமோ அவ்வளவு உழைப்பையும் கொடுத்து மக்களைத் தன் பக்கமே ஈர்த்து வைத்திருக்கும் இந்திய நாயகன், என் நண்பன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஏற்புடைய விருதாகவே எண்ணி மகிழ்கிறேன்.
மேலும், எத்தனை உயரம் உண்டோ அத்தனை உயரத்தையும் ரஜினிகாந்த் அடைய அன்பின் வாழ்த்துகள். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இந்திய சினிமாவின் இந்த உயரிய விருதை உரிய நேரத்தில் வழங்கிய மத்திய அரசிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT