Published : 28 Nov 2015 01:32 PM
Last Updated : 28 Nov 2015 01:32 PM
மிர்ச்சி சிவா, அசோக் செல்வன் இணைந்து நடிக்கும் படம், சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகும் படம் என்ற இந்த இரு காரணங்களே '144' திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தின.
இரு ஊர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை குறித்த படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திய ட்ரெய்லர் அதே சமயத்தில், சூதுகவ்வும் மீட்ஸ் முண்டாசுப்பட்டி என்ற லீட் மூலம் இது வழக்கமான கிராமத்துப் படம் இல்லை என்பதையும் உணர்த்தியது. அதனால் சின்ன எதிர்பார்ப்புடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
கதை: எரிமலைக்குண்டு, பூமலைக்குண்டு என்ற இரு ஊர்களுக்கும் வழக்கமாக ஏற்படும் ஈகோ பிரச்சினையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஒரு கடத்தல் சம்பவம் நிகழ திட்டமிடப்படுகிறது. கடத்தல் நிகழ்ந்ததா? தடை உத்தரவு என்ன ஆனது? பிரச்சினைகள் தீர்ந்ததா? என்பது மீதிக் கதை.
வழக்கமான கதையோட்டத்தில் புத்திசாலித்தனமான ஐடியாக்கள், கிரியேட்டிவிட்டியை புகுத்தி சிரிக்க சிரிக்க படம் தந்திருக்கும் அறிமுக இயக்குநர் ஜி.மணிகண்டனுக்கு வார்ம் வெல்கம்.
சிவா தான் படத்தில் பெரிதாக ஃபோகஸ் செய்யப்பட்டிருக்கிறார். அதை தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 'தமிழ்ப்படம்', 'கலகலப்பு' போன்ற படங்களில் நடித்த சிவாவின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் டெவலப் செய்தால் வெர்ஷன் 2 சிவாவாக இருந்தால் எப்படி இருக்கும்? அதை நிறைவாக செய்திருக்கிறார் சிவா.
சிவாவின் டயலாக் டெலிவரியிலும், நகைச்சுவை சரவெடியில் சிரித்து குலுங்குகிறது தியேட்டர். சிவாவின் மிகச் சிறந்த கம் பேக் படம் இது.
'சார் உங்களுக்கு என்ன வேணும்?'
'2 கிராம்ல வெயிட்டா ஒரு மூக்குத்தி வேணும்' என்று நகைக் கடையில் லந்து பண்ணுவது, 'பகுமானக் கோழி பறந்து பறந்து போகுமாம்' என்று ஓவியாவுக்கு அறிவுரை சொல்வது, நண்பனிடம் ஓவியாவை, 'இவதான் என் குட்பி. நான் கல்யாணாம் கட்டிக்கப்போற பொண்ணு' என அறிமுகப்படுத்துவது, 'ப்ளீஸ் மை அண்டர்ஸ்டேண்ட். ட்ரை டூ கல்யாணி திஸ் சிச்சிவேஷன்' என அச்சு பிச்சு ஆங்கிலத்தில் உதார் விடுவது என படம் முழுவதும் அதகளம் செய்திருக்கிறார்.
மதுரை வட்டார மொழியில் பேச அசோக் செல்வன் முயற்சித்திருக்கிறார். அதுவும், காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனிடம் பேசும்போது மதுரை மொழி ஒட்டாமல் தனித்துத் துருத்தி நிற்கிறது. 'இங்க யாரும் 100% நல்லவங்களும் இல்லை, கெட்டவங்களும் இல்லை' என்று காதலியிடம் பேசும்போது மட்டும் ஹீரோவாகத் தெரிகிறார்.
ஓவியாவின் கேரக்டர் கொஞ்சம் வித்தியாசமானதுதான். ஆனால், அதை எந்த விதத்திலும் கிண்டல் செய்யாமல், கேரக்டரை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் இயல்பாக வடிவமைத்திருக்கின்றனர்.
'முண்டாசுப்பட்டி' முனீஷ்காந்தாக மின்னிய ராமதாஸ் இதில் பேசா கலைஞனாக பின்னியிருக்கிறார். டார்ச்சர் வில்லனாக வரும் உதயபானு மகேஸ்வரன், ராயப்பனாக வரும் மதுசூதன ராவ், அசோக் செல்வனின் காதலியாக நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் பொருத்தமான தேர்வு. எந்த அவசர சூழலிலும் 'கண்டிப்பா' என பேசும் இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி கதாபாத்திரம் இயல்பான ஈர்ப்பு.
குருதேவின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்துக்குப் பெரும்பலம். ஆனால், பாடல்கள் மட்டும் ரசிக்கும்படி இல்லை.
கிளைமேக்ஸ் நெருங்கிய பிறகும், அதை இன்னும் ஜவ்வாக இழுக்காமல் லியோ ஜான்பால் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
கதைக்களத்துகுரிய லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால், அதை ரசிகர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவே இல்லை. லாஜிக், மேஜிக் என எதைப் பற்றியும் யோசிக்காமல் சிரிப்பதற்காக மட்டுமே படம் பார்க்கும் நபராக இருந்தால், வெள்ளைப் பற்கள் அனைத்தும் வெளியே தெரிய சிரிக்க வைக்கும் ப்ளாக் காமெடி சினிமா '144' உங்களை கண்டிப்பாக விருந்தூட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT