Published : 20 Mar 2021 03:54 PM
Last Updated : 20 Mar 2021 03:54 PM
தான் வழக்கமான கதைகளைச் சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் பிரபு சாலமன் கூறியுள்ளார்.
பிரபு சாலமன் இயக்கி, ராணா டகுபதி நடிப்பில் 'காடன்' திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இதை முன்னிட்டு ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பிரபு சாலமன் அளித்த பேட்டி:
"ஒரு இயக்குநராக சமூகத்துக்கு உபயோகமான ஏதோ ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். வழக்கமான கதையைச் சொல்லும் இயக்குநராக இருக்க நான் விரும்பவில்லை. நாட்டுக்காக, சமூகத்துக்காக, காதலுக்காகச் சண்டையிடம் நாயகனை நான் காட்ட விரும்பவில்லை. இதை நிறையப் பேர் பார்த்து விட்டனர். இதற்குச் சண்டையிட பலர் இருக்கின்றனர். நமது மிருகங்கள், சுற்றுச்சூழல் பற்றி யார் பேசுவது? அதற்கு யார் குரல் கொடுப்பது?
வனங்களில் யானைகளின் பங்கு மிகப்பெரியது. காடுகளை, யானைகளை, சுற்றுச்சூழலைக் காப்பதன் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிட்டோம். நாம் இயற்கையை எப்படித் தொந்தரவு செய்திருக்கிறோம் என்பதன் விளைவுதான் இந்த நோய்தொற்று.
'கும்கி' திரைப்படத்தை எடுக்கும்போது யானைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். இந்தியாவில் இந்த மிருகங்களின் நிலை என்ன என்பது குறித்து ஒழுங்காக ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இது 'காடன்' வர சரியான நேரமாகத் தெரிந்தது. யானைகளுடன் படம்பிடிப்பது மிகப்பெரிய அனுபவம்.
ராணா நல்ல நண்பர். அவர் ஒரு நாள் என்னைச் சந்தித்தார். நாங்கள் ஒரு படத்தை இணைந்து திட்டமிட்டோம். அவர் மிக எளிமையான மனிதர். இதுபோன்ற ஒரு படத்துக்கு அப்படி ஒரு மனிதர் நடிப்பது முக்கியம். அந்தக் கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டோடு இருந்ததால் எனக்கு அவருடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது.
இந்தத் திரைப்படம் தேசிய அளவில் அனைத்துத் தரப்பினருக்குமானது. இந்தி ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ராஜேஷ் கண்ணா நடித்த 'ஹாத்தி மேரே சாத்தி' திரைப்படத்துக்குப் பிறகு யானைகள் இருக்கும் திரைப்படத்தை அவர்கள் பார்க்கவிருக்கின்றனர்".
இவ்வாறு பிரபு சாலமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT