Published : 03 Nov 2015 01:34 PM
Last Updated : 03 Nov 2015 01:34 PM
'கபாலி'யில் ரஜினியோடு நடித்த அனுபவம் குறித்து மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர் சற்குணராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் ரஜினி கைசையப்பது, ரஜினி உரையாடுவது உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில், சற்குணராஜ் என்ற ரசிகர் ஒருவர் ரஜினியோடு 'கபாலி' படத்தில் நடித்திருக்கிறார். மலாகாவில் உள்ள சிறையில் காட்சிகள் படமாக்கப்பட்ட போது ரஜினியோடு நடித்த அனுபவங்கள் குறித்து சற்குணராஜ் கூறியது:
"கடந்த வாரம் 'கபாலி' படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு சென்றிருந்தேன். தலைவர் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்று தான் சென்றேன். பயங்கர கூட்டமாக இருக்கும், தலைவரைப் பார்த்தாலே போதும் என்று தான் சென்றேன். அங்குள்ள ஜெயிலுக்கு வெளியே தான் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்குள்ள படக்குழுவினர், ஜெயிலுக்குள் கைதிகளாக நடிப்பதற்கு இங்குள்ள ஆட்கள் தேவைப்படுகிறார்கள். போன், கேமிரா போன்றவற்றை எல்லாம் வெளியே வைத்துவிட வேண்டும், ஜெயில் உடை அணிய வேண்டும் என்று சொன்னார்கள். அதுமட்டுமன்றி ஜெயில் கைதி என்றால் முடி எல்லாம் வெட்டி, மீசை, தாடி எல்லாம் எடுத்தது போல் மேக்கப் பண்ணுவார்கள் என்றும் தெரிவித்தார்கள். யாருக்கெல்லாம் விருப்பமோ பண்ணலாம் என்று கேட்டார்கள்.
தலைவருக்காக இதுகூட பண்ண மாட்டோமா என்று சொன்னோம். முடி எல்லாம் வெட்டி, மேக்கப் எல்லாம் போட்டவுடன் எனக்கு சிவப்பு நிற ஜெயில் உடை கொடுத்தார்கள். ரஜினி சார் ப்ளூ கலர் உடை அணிந்திருந்தார். உண்மையான சிறை என்பதால் சிறைக் கைதிகளும் இருப்பார்கள், ஆகையால் 'தலைவா', 'சார்' என்று கத்தக் கூடாது என்றார்கள். மேலும், படப்பிடிப்புக்கு என்று தனியாக ஒரு இடம் ஒதுக்கி, அங்கு தான் காட்சிப்படுத்தினார்கள்.
என்னுடன் வந்தவர்களும் நானும் ரஜினி சாருடன் நடித்தோம். அவ்வப்போது 'ஹாய்' என்பார். படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வரக்கூடாது என்பதால் மிகவும் அமைதியாக இருந்தோம். 7 மணி நேரம் ரஜினி சாருடன் நடித்தேன். தலைவரை மட்டுமே பார்த்துக் கொண்டே இருந்தேன். ஜெயிலில் இருந்து வெளியாகும் போது, தலைவர் ரஜினி ஸ்டைலாக வெளியே வருவது போல எல்லாம் காட்சிப்படுத்தினார்கள். 4 கேமராக்கள் மூலமாக படமாக்கினார்கள்.
இன்னொரு காட்சியில் நாங்கள் எல்லாரும் ஜெயிலுக்குள் உட்கார்ந்திருப்போம், அப்போது ரஜினி சாரை அழைத்துப் போவது போல படமாக்கினார்கள். படப்பிடிப்புக்கு இடையே தலைவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். என்னைத் தொட்டு தூக்கி "நல்லாயிருய்யா" என்று சொன்னார். அதுவே ஒரு வரம்.
ஜெயில் காட்சி முடிந்து காரில் தலைவர் கிளம்பிய உடன், அவருடைய காரைப் பின் தொடர்ந்தோம். ஒரு சிக்னலில் ரஜினி சார் காருக்கு அருகில் போய் நின்றோம். நாங்கள் காரின் கண்ணாடியை இறக்கி கை காட்டினோம். அப்போது ரஜினி சாரும் காரின் கண்ணாடியை இறக்குவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனது பக்கத்தில் இருந்த என் அண்ணன் "உங்கள் குரலைக் கேட்க ஆவலாக இருக்கிறது சார்" என்றவுடன், அவருக்கே உரிய ஸ்டைலில் "தேங்க்யூ தேங்க்யூ" என்று சிரித்தார். "உள்ளே என்னுடன் நடித்தீர்களா" என்று கேட்டார், உடனே ஆமாம் சார் என்றேன்.
ஒருவழியாக ரஜினி சாரைப் பார்த்து, அவருடன் நடித்துவிட்டேன். 'கபாலி' ஒரு மாஸ் ஆன படம், அதில் சந்தேகமே இல்லை" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT