Published : 22 Jun 2014 10:29 PM
Last Updated : 22 Jun 2014 10:29 PM
பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் சிறு நீரக கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 65.
தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 125-க்கும் அதிகமான படங்களை இயக்கியவர் ராம நாராயணன். விலங்குகளை வைத்து படமெடுத்து புகழ் பெற்றவர். திமுக ஆட்சியின் போது 1989-ல் காரைக்குடி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். இயல் இசை நாடக மன்றத் தலைவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். கலைமாமணி உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சமீபகாலமாக இவர் சிறுநீரக கோளாறால் அவதிப்படு வந்தார். இதற்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் காலமானார்.
காரைக்குடியில் பிறந்த ராம நாராயணன், பாடலாசிரியராகும் ஆர்வத்தில் தான் சென்னைக்கு வந்துள்ளார். தனது நண்பர் எம்.ஏ காஜாவுடன் சேர்ந்து ராம்-ரஹீம் என்ற பெயரில் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 1976-ல் ஆசை அறுபது நாள் என்ற படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார்.சிவப்பு மல்லி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஆடிவெள்ளி, துர்கா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, ராஜ காளியம்மன், கந்தா கடம்பா கதிர்வேலா உள்பல பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, போஜ்புரி, பெங்காலி, ஒரியா, மலாய் என 9 மொழிகளில் படம் இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர். பல ஆங்கிலப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டவர்.
இறுதிச்சடங்குக்காக அவரது உடல் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT