Published : 17 Mar 2021 07:54 PM
Last Updated : 17 Mar 2021 07:54 PM

'சாந்தி செளந்தரராஜன்' பயோபிக்கில் நானா? - ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு

சென்னை

’சாந்தி செளந்தரராஜன்’ பயோபிக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு 12 சர்வதேசப் பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்று கொடுத்தவர் தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் ஆவார். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலினச் சோதனை அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது.

இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகளப் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் படமொன்று தயாராகிறது. இந்தப் படத்தில் சாந்தி செளந்தரராஜனாக நடிக்கவிருப்பது யார் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கவுள்ள இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். உடனடியாக, சாந்தி செளந்தரராஜனாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாகப் பலரும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மட்டுமே வெளியிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

888 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியராக யுகபாரதி, வசன கர்த்தாவாக பொன்.பார்த்திபன், ஒளிப்பதிவாளராக கோபிநாத் டி.தேவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

சாந்தி செளந்தரராஜனாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்த அறிவிப்பு தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x