Published : 08 Mar 2021 11:00 AM
Last Updated : 08 Mar 2021 11:00 AM
மறைந்த நடிகை சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் தான் நடிப்பது குறித்து உருக்கமான பதிவை நடிகை காவ்யா பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இதில் முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலம். அதில் நடித்து வந்த சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
சித்ராவின் மரணத்துக்குப் பிறகு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி, முல்லையாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அதன் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து காவ்யா எதுவும் கருத்து கூறாமல் இருந்துவந்தார்.
இந்நிலையில் முதன்முறையாக இதுபற்றி காவ்யா பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''முல்லை. நான் பதிவிடும் முதல் படம் இது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உருவாக்கப்பட்டு, பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் பிறந்து வளர்ந்து, தனக்கென கொண்ட அம்சங்களையும், பொருத்தமான உடல் மொழியையும் கொண்ட ஒரு தமிழ்ப் பெண் கதாபாத்திரம். அழகான பெண்களில் ஒருவரான விஜே சித்ராவை இக்கதாபாத்திரத்திற்குத் தேர்வுசெய்யக் குழுவினர் தீர்மானித்தனர்.
தனிப்பட்ட முறையில் நான் அவரைச் சந்தித்ததே இல்லை. அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஒரே ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் அவரை தூரத்தில் இருந்து பார்த்தேன். அப்போது நான் சேனலுக்கு புதிது என்பதால் அது அவர்தானா என்று எனக்குத் தெரியவில்லை. அவரோடு நேரம் செலவழிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் தன்னுடைய வாழ்க்கையைச் சிறப்பாகச் செதுக்கி, பலருக்கும் உந்துசக்தியாக இருந்தார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய கதைகள் எனக்கும் ஊக்கமாக இருந்தன.
முல்லையாக அவர் நடித்த காட்சிகளை நான் பார்த்ததில்லை. காரணம் நான் அந்த சீரியலைப் பார்த்ததில்லை. இன்ஸ்டாகிராமில் மட்டுமே பார்த்துள்ளேன். அவர் மிகவும் சிறப்பான முறையில் அந்தக் கதாபாத்திரத்துக்கு 100% நியாயம் செய்துள்ளார். ஆனால், எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரிதான் முடிகிறது. அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பதே ஒருவரிலிருந்து ஒருவருக்கு வித்தியாசப்படுகிறது. அவர் முல்லையாக வாழ்ந்தார்.
நாம் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. சித்ரா தன்னை விட்டுச் செல்வார் என்று முல்லையே எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் நம் பார்வையிலிருந்து மறைந்திருந்தாலும், நம் மனதிலிருந்து மறையவில்லை. அனைத்து ரசிகர்களும் அமைதி பெற்று இதிலிருந்து மீள வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஒரு நடிகையாக இதை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறேன். இது எனக்குக் கிடைத்ததில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன். இதுவும் கடந்து போகும். பொதுவாக நான் நடிக்கும் எந்தவொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்றே நினைப்பேன். அது எதுவாக இருந்தாலும் சரி. 'பாரதி கண்ணம்மா' அறிவுமணி ஒரு அருமையான கதாபாத்திரம். அது பலராலும் நேசிக்கப்பட்டது. அதே போல முல்லை கதாபாத்திரத்துக்கும் நான் நியாயம் செய்வேன். மக்களை மகிழ்விக்கத் தவறமாட்டேன்.
எனது ரசிகர்களையும், முல்லை ரசிகர்களையும் ஏமாற்ற மாட்டேன். என் உயிர், கனவு, தொழில், என் உலகம் என அனைத்துமே நடிப்புதான். தொடக்கம் முதல் இப்போது வரை என்னை ஆதரிக்கும் அனைவரும், என் பெற்றோர், நண்பர்கள், என் இன்ஸ்டாகிராம் குடும்பம் அனைவருக்கும் நன்றி. இது முடிவல்ல. புதிய முல்லையான எனக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸுக்கும் உங்கள் ஆதரவையும், அன்பையும் வழங்குங்கள். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்பையும், நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம்''.
இவ்வாறு காவ்யா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT