Published : 25 Nov 2015 11:04 AM
Last Updated : 25 Nov 2015 11:04 AM
மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு அங்கே நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘கபாலி’ படப்பிடிப்பின்போது மலேசியாவில் ரஜினிக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றிய ராஜ் அபுக்கா ஜோவை தொடர்புகொண்டு பேசினோம். ரஜினியுடன் பணியாற்றிய நாட்கள் குறித்து ராஜ் அபுக்கா ஜோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:
“நான், மைக், சாம்மாட், சாரி உள்ளிட்டவர்கள்தான் ரஜினிக்கு மெய்க் காப்பாளர்களாக பணியாற்றினோம். கமல், சூர்யா உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு வரும் போது நான் மெய்க்காப்பாளராக பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய சிலை ஒன்றை என் வீட்டில் வைத்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட எனக்கு ரஜினியுடன் பணியாற்றும் அனுபவம் கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அவருடைய வேகத்தை நான் வேறு எந்த நடிகரிடமும் பார்க்கவில்லை. ரஜினி வெளியே கிளம்பிவிட்டால், அவருக்கு ஈடுகொடுத்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
ஒருமுறை அவர் அறையில் இருக்கும்போது, நாங்கள் வெளியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அறையில் இருந்து வெளியே வந்த அவர், “வீட்டுக்கு செல்லவில்லையா?” என்றார். “இல்லை சார்.. உங்கள் பாதுகாப்புக்காக இருக்கிறோம்” என்றோம்.
உடனடியாக அவர் தனது அறைக்குச் சென்று தன் உதவியாளர் சுப்பையாவிடம் “நான் உள்ளே நிம்மதியாக தூங்குவேன். ஆனால் அவர்களோ வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். கஷ்டமாக இருக்கிறது. அவர்களை வீட்டுக்கு போகச் சொல்லுங்கள். போன் நம்பர் வாங்கிக் கொள்ளுங்கள். உதவி தேவைப்படும் போது நாம் அவர்களை அழைக்கலாம்” என்று கூறியிருக்கிறார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.
இந்திய திரையுலகம் கொண்டாடும் ஒரு நடிகர், மலேசியாவில் மிகவும் எளிமையாக இருந்தார். காரில் சென்று கொண்டிருப்பார். சிக்னலில் யாராவது கையை காட்டினால் உடனே கண்ணாடியை இறக்கிவிட்டு அவர்களுடன் பேசுவார், கை குலுக்குவார். சில சமயங்களில் நாங்கள் சென்று அவருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டு விடக் கூடாதே என்று தடுப்பதற்குள் அவருடைய கைகளில் அடிபட்டுவிடும். அதைக் கூட அவர் பெரிதுபடுத்தவில்லை. அடுத்த நாளும் அப்படியே செய்வார். தனது ரசிகர்கள் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்.
எங்களை எல்லாம் மெய்க்காப்பாளர்கள் என்றே அவர் நினைக்கவில்லை. நண்பர்கள் போன்று நடத்தினார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் சாப்பிட்டீர்களா என்று விசாரிப்பார். பத்திரமாக வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்வார். நான் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருக்கிறேன். ஒரு நாள் என்னை அழைத்து ஆசிர்வாதம் செய்து மாலை ஒன்றை போட்டுவிட்டார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவருட னான 19 நாட்களும் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்.
ஒருநாள் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில், தங்கியிருந்த ஓட்டலுக்கு கீழே கைலியுடன் வந்துவிட்டார். நாங்கள் அவரைத் தடுத்தபோது, “எனக்காக என் ரசிகர்கள் மழை, வெயில் என பார்க்காமல் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதை விட, நான் கீழே இறங்கி வந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்றார்.
தமிழ்நாட்டை அடுத்து மலேசியாவில் தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ரஜினிக் காக தமிழ் கற்றுக் கொண்டவர்கள் இங்கு அதிகம். இங்கு அவர் இருக்கும்போது வெவ் வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் அவரை பார்க்க வந்து நின்றது மறக்க முடியாதது. அவர் மீண்டும் மலேசியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன். அவரிடம் மீண் டும் பணியாற்ற இருக்கும் நாட்களுக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு ராஜ் அபுக்கா ஜோ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT