கலைமாமணி விருது: தாயின் காலில் விழுந்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

கலைமாமணி விருது: தாயின் காலில் விழுந்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Published on

எங்களை கரைசேர்த்த தாய்க்கு இந்த கலைமாமணி விருது சமர்ப்பணம் என நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், தாயின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

"சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பெரும்பாலான திரைவிழா மேடைகளில் தனது தந்தையை நினைவுகூர்வது வழக்கம். அத்துடன் தன்னை தனது தாய் அரும்பாடுபட்டு வளர்த்ததையும் பெருமிதத்துடன் சொல்வார்.

அந்த வகையில், இன்று மாநில அரசின் விருதைப் பெற்றுவிட்டு தாயிடம் ஆசி பெற்று அதனையும் நெகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, இன்று (பிப்.20) மாலை 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமா, இசை நாடகம், நாட்டுப்புறக் கலைகள், சின்னத்திரை உள்ளிட்ட கலைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இவர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in