Published : 16 Feb 2021 05:33 PM
Last Updated : 16 Feb 2021 05:33 PM

‘நீயும் தோற்கலை; நானும் தோற்கலைன்னு சொன்னார் சிவாஜி சார்!’ - பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ அனுபவங்கள்

‘முதல் மரியாதை’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘டேய் நீயும் தோற்கலை, நானும் தோற்கலை. உலகத்தரம் வாய்ந்த படத்தைக் கொடுத்திருக்கேடா’ என்று சிவாஜி சார் மனமுவந்து பாராட்டினார்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற தலைப்பில் இணையதளச் சேனல் நடத்தி வருகிறார். அதில் தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரையுலக அனுபவங்களையும் மனம் திறந்து பகிர்ந்து வருகிறார்.

நடிகர்திலகம் சிவாஜியை வைத்து பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தை இயக்கினார். இந்தப் படம் குறித்தும் சிவாஜி குறித்தும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது :

‘’நான் ரசித்த சிவாஜி சார், நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு வருவதற்குக் காரணமாக இருந்த சிவாஜி சார், அவரை நான் இயக்குகிறேன். அவர் எப்படி நடிக்கவேண்டும் என்று நான் சொல்லி நடிக்க வைத்தேன் என்பதையெல்லாம் நான் என் வாழ்நாளில் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

படத்தில், ஒருகாட்சி. சிவாஜி வயலில் வேலை செய்துகொண்டிருப்பார். அப்போது வயலுக்குள் புகுந்துகொண்டு ராதா பரிசலுடன் வருவார். அதில் ஆர்ட் டைரக்டர் சேகரும் நடித்தான். என் நல்ல நண்பன். திறமைசாலி. இப்போது அவன் இல்லை. ஹார்ட் அட்டாக்கால் இறந்துவிட்டான். அந்தக் காட்சியில் அவனும் நடித்திருந்தான்.

அப்படி வயலுக்குள் இறங்கி நடந்து வரும் போது, கிராமத்து ஸ்டைலில் ஒரு காட்டுக்கத்து கத்த வேண்டும் சிவாஜி சார். நகரத்திலேயே இருந்ததால், சிவாஜி சாருக்கு இப்படிக் கத்துவதெல்லாம் தெரியவில்லை. ‘நீ கத்திக் காட்டுடா’ என்றார். நான் ‘ஹோய்.. யாருடா அது?’ என்று கத்திக் காட்டினேன். அதேமாதிரி கத்திப் பேசினார். நடித்துமுடித்துவிட்டு, ‘டேய்... நீ கிராமத்துலேருந்து இப்பதான் வந்திருக்கே. நான் வந்து எத்தினியோ வருசமாச்சு’ என்றார் சிரித்துக் கொண்டே.

ஒரு கலைஞனாக, சிவாஜியுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. நல்ல மனிதர். நல்ல சாப்பாட்டுப் பிரியர். மத்தியான ஷூட்டிங்ல சாப்பிடமாட்டேன். சிவாஜி சார் சாப்பாட்டுப்பிரியர். நன்றாக ரசித்துச் சாப்பிடுவார். நான் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘டேய்... என்னடா சாப்பிடாம இருக்கே? உழைக்கறதே சாப்பிடுறதுக்குத்தாண்டா. உக்காருடா’ என்று சொல்லி என்னை சாப்பிடவைத்தார். மீன் எப்படிச் சாப்பிடவேண்டும், உணவை எப்படி எடுக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார்.

’முதல் மரியாதை’ படத்தை 32 நாட்களில் எடுத்து முடித்தேன். சிவாஜி சார் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் இருந்தது. ராதாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் வேலை. சிவாஜி சார் ஒரு மகாகலைஞன் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்... ‘இன்னியோட உங்க காட்சிகள் முடிஞ்சுதுண்ணே. கிளம்பிடலாம்ணே’ என்று சொன்னேன். ‘ராசா...’ என்று அழைத்தார். அவரின் கண்கள் கலங்கியிருந்தன. ‘ராசா... இம்புட்டு நாள் இங்கேயே நடிச்சேனா. இருந்த இந்த இடத்தைவிட்டு போறதுக்கு மனசு வரமாட்டேங்கிதுடா. ஒவ்வொரு இடமும் எங்கிட்ட ஏதோ பேசுற மாதிரியே இருக்குடா’ என்று கண்கலங்கிவிட்டார். அதான் உண்மையான கலைஞன்.

அதேசமயம், காமெடியாவும் நடந்துப்பார் சிவாஜி சார். அதுவும் எப்படி? கண்கலங்கி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்த சிவாஜி சார்... ‘ராசா... என்னை இப்படி அனுப்பிச்சிட்டு, அப்புறம் ராதாவுக்கு நிறைய சீன் எடுத்து சேத்து வுட்றாதடா’ என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அப்படி நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அவர்’’.

படமெல்லாம் முடித்தாகிவிட்டது. அடுத்து டப்பிங் போவது என் வழக்கம். ஆனால் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு டப்பிங் பேசுவது சிவாஜி சாரின் வழக்கம். எங்களுக்குள் இதுசம்பந்தமாக வாக்குவாதம். நான் கொஞ்சம் சர்வாதிகாரி மாதிரி நடந்துகொள்வேன். என் நண்பன் சித்ரா லட்சுமணன், ‘சார் இது உங்க கம்பெனி படம். வீணா பிரச்சினை வேணாம்’ என்று சொல்ல, அடுத்து மனோராமாவுக்கு சொந்தமான தியேட்டரில், படத்தை ரஷ் போட்டுக் காட்டினேன். சிவாஜி சார், ராம்குமார், பிரபு, நான் எல்லோரும் படம் பார்த்தோம்.

இரண்டு ரீல் பார்த்தார். திருப்தி அவருக்கு. அடுத்து கரண்ட் கட்டாகிவிட்டது. இருபது நிமிடங்கள் காத்திருந்தார். பிறகு சிவாஜி சார், ‘டேய்... நான் சொன்னபடி ரெண்டு ரீல் பாத்துட்டேன். நானும் தோற்கலை. நீ சொன்னபடி முழுசா போட்டுக்காட்டலை. நீயும் தோற்கலைடா. டப்பிங் போயிடலாம்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.

பிறகு ஒருநாள் டப்பிங் முடிந்தது. ‘ஆஸ்கார் விருது கிடைத்தால் கூட இந்த திருப்தி வந்திருக்காது. அப்படியொரு படம் எடுத்திருக்கே. நீ எங்கே கேமிரா வைச்சே, ஏன் வைச்சே, எதனால அந்த ஷாட் வைச்சே... எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கே. உலகத்தரமான படத்தைக் கொடுத்திருக்கே’ என்று சிவாஜி சார் மனப்பூர்வமாகப் பாராட்டினார்’

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x