Published : 15 Feb 2021 03:39 PM
Last Updated : 15 Feb 2021 03:39 PM
‘உங்க ஊர்ல முகம் பாக்கறதுக்கு கண்ணாடியே இல்லியா?’ என்று சிவாஜி சார் என்னிடம் கேட்டார்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜா ‘என் இனிய தமிழ் மக்களே’ என்றொரு இணைய சேனலில், தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரை அனுபவங்களியும் பகிர்ந்து வருகிறார்.
‘முதல் மரியாதை’ படம் குறித்த தன் அனுபவங்களை அதில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜா தெரிவித்ததாவது :
‘சிவாஜி சாரை வைத்து ‘முதல் மரியாதை’ படம் பண்ணுவது என்று முடிவாகி, எல்லாம் ஆரம்பித்துவிட்டேன். மைசூரில் படப்பிடிப்பு. சிவாஜி சாரும் வந்துவிட்டார். ஆனால் எனக்குத்தான் ரொம்பவே படபடப்பு. அவரை இயக்குவதென்றால் சாதாரண காரியமா? அவரின் படங்களைப் பார்த்துவிட்டுத்தான் அவரைப் போல் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு திரையுலகிற்கு வந்தேன். கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.
இன்னொரு விஷயம்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் மகா கலைஞன். அவருக்கு இந்திய அரசாங்கமும் சரி, உலக அளவிலும் சரி... சிவாஜி சாருக்கு உரிய மரியாதையை, கெளரவத்தை வழங்கவே இல்லை என்கிற வருத்தம் உண்டு எனக்கு. அப்படிக் கிடைத்திருந்தால் அதுவே முழுமையான மரியாதையாக இருந்திருக்கும்.
சரி... விஷயத்துக்கு வருவோம்.
‘முதல் மரியாதை’ படம் பூஜை போடும்போதே, ‘என்ன பாரதி? ஏன் இப்படி பண்ணிட்டே?’ என்று பெரிய இயக்குநர் என்னிடம் கேட்டார். வயதானவர்களுக்குள் ஏற்படுகிற காதலையும் அன்பையும் சொல்லும் படம் தேவையா என்று கேட்டார். ‘சரி விடு’ என்று சொன்னார். பூஜை அன்றைக்கே இப்படியென்றால் எனக்கு எப்படியிருக்கும்? ஆனால் அதையெல்லாம் தாண்டி, உலக அளவில் மிகப்பெரிய மரியாதையை எனக்குத் தந்த படம் ‘முதல் மரியாதை’.
முதலில் பாடல் காட்சி. அப்படிப் பாடல் காட்சி எடுப்பதுதான் என் வழக்கம். நடிக்கிற காட்சியை விட, பாடல் காட்சியில் எல்லா ரசங்களும் வந்துவிடும். பரஸ்பரம் புரிந்துகொள்ளவும் பாடல் காட்சி ஏதுவாக இருக்கும்.
‘பூங்காற்று திரும்புமா’ பாடல். இளையராஜா மிகப்பிரமாதமாக கம்போஸ் பண்ணிக் கொடுத்தான். எல்லாப் பாடல்களையுமே அப்படிக் கொடுத்தான். சிவாஜி சார் கேரக்டர் கனமானது. மனைவியால் டார்ச்சரை சந்தித்தவர், அன்புக்காக ஏங்குகிறவர். அமைதியைத் தேடிக்கொண்டிருக்கிறார். வாழ்வில் தென்றல் வராதா? தெம்மாங்கு பாடாதா? என்று துக்கித்துக் கொண்டிருக்கிறார். ஏக்கமுடன் இருக்கிறார்.
விவசாயிதான். என்றாலும் நாட்டுப்புற கலைஞனுக்கு நிகரானவர். குருவியைப் பார்த்துப் பாடுவர். கிளியைப் பார்த்து பாடுவார். எசப்பாட்டு பாடுவார். இளையராஜா கிரேட் மேன். மிகச்சிறந்த இசையைக் கொடுத்தான். ‘பூங்காற்று திரும்புமா?’ பாடலைப் போலவே ‘ஏ கிளியிருக்கு குளமிருக்கு’ என்ற பாடலும் ரொம்பவே அழகாகப் பண்ணிய பாடல்.
சிவாஜி சார், சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.எஸ். போன்ற கலைஞர்களுக்கு தகுந்தது போல் வாயசைத்துப் பாடி நடித்தவர் சிவாஜி சார். ‘தங்கப்பதுமை’ படத்தில், கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி’ பாடலெல்லாம் அவர் நடிப்பாலும் வாயசைவாலும் மிகச் சிறப்பாக இருக்கும். ’பூங்காற்று திரும்புமா?’ பாடலுக்கும் அப்படித்தான் வாயசைத்தார். ’அண்ணே... இந்த அளவுக்கு வேணாம்ணே. பூங்காற்று திரும்புமா... பாட்டு வரி. வாயசைப்பும் பூங்காற்று மாதிரியே மென்மையா இருக்கட்டும்ணே’ என்றான். ‘அருமையா சொன்னேடா’ என்று என்னைப் பாராட்டினார்.
நான் எதிர்பார்த்த மாதிரியே நடித்துக் கொடுத்தார். வடிவுக்கரசியும் அப்படித்தான். ‘இந்தக் கேரக்டர் வேண்டாம் நான் நடிக்கல’ என்றார். ‘சார் வேணாம் சார், என்னால கத்திப் பேசிலாம் நடிக்க முடியல சார்’ என்று வடிவுக்கரசி அழுதேவிட்டார். பிறகு அவரை சமாதானப்படுத்தினேன். பிரமாதமாக நடித்தார். இன்றுவரை வடிவுக்கரசி நடிப்பைச் சொல்லும் படமாக ‘முதல் மரியாதை’ வந்திருக்கிறது. அதேபோல, ‘பூங்காற்று திரும்புமா’ பாடலை இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
‘இந்தக் காட்சில நான் என்ன பண்ணனும்? நடிச்சிக்காட்டுடா’ன்னு சிவாஜி சார் சொன்னார். அவருக்கு நான் எப்படி நடிச்சுக் காட்டமுடியும்? நடிச்சுக்காட்டினேன். அவரும் சூப்பரா நடிச்சு முடிச்சார். ‘டேய்... நீ பெரிய கலைஞன்டா. நல்ல நடிகன்’ன்னு சொல்லிப் பாராட்டினார். ‘உங்களைப் பாத்துத்தான்யா நடிக்க வந்தேன். உங்களுக்குப் போட்டியா நடிகனாகணும்னு நினைச்சேன்’ என்று வெட்கத்துடன் சொன்னேன்.
உடனே அவர் சிரித்துக் கொண்டே, ‘உங்க ஊர்ல கண்ணாடிலாம் இல்லியா?’ என்று கிண்டல் செய்தார். மறக்கவே முடியாது. அவரை இயக்கியதும், அவருடன் பழகியதும்... சிவாஜி சார் எனக்குத் தந்த மரியாதை. வெகுமதி’’
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT