Published : 18 Nov 2015 10:17 AM
Last Updated : 18 Nov 2015 10:17 AM
தமிழ்த் திரையுலகில் ஒரு நாயகி தனது எந்தப் படத்தையும் விளம்பரப்படுத்த மாட்டார்... ஆனா, அந்தப் படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது உறுதி. 2015-ல் 'மாயா', 'தனி ஒருவன்', 'நானும் ரவுடிதான்' என வரிசையாக மூன்று ஹிட்களில் வலம் வந்த நயன்தாராதான் அந்த நாயகி.
நம்மில் பலருக்கும் வெள்ளித்திரையில் நடிக்கும் நயன்தாராவைத் தெரியும். ஆனால், திரைக்கு பின்னால் நயன்தாராவிடம் இருக்கும் பல குணங்கள், அவரது துறையிலேயே பெரும்பாலானோரிடம் இல்லை என்பதால், தனித்துவமானது என்றே சொல்லலாம்.
* 'வில்லு' படத்தின் படப்பிடிப்பு நடந்த்போது, அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் வெங்கட் மாணிக்கம். மூளையில் கட்டி வந்ததால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நயன்தாரா ஒரு பெரிய தொகையை அளித்தார். அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து, நயன்தாராவுக்கு நன்றி சொல்ல பூங்கொத்தோடு சென்றார் வெங்கட்மாணிக்கம்.
"ஏன் பூங்கொத்து. இதெல்லாம் வேண்டாம். எனக்கு தோணுச்சி பண்ணினேன். அவ்வளவு தான்." - இதுதான் நயன்தாராவின் பதில்.
* விரைவில் வெளிவர இருக்கும் 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அப்போது, அந்த ஊரில் உள்ள ஒரு பையனை நயன்தாராவுக்கு உதவியாளராக நியமித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பையன் படப்பிடிப்புக்கு வரவில்லை. படக்குழுவினர் விட்டுவிட்டார்கள். 'ஏன் வரவில்லை' என்று விசாரித்தபோது, அந்தப் பையனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என தெரிந்திருக்கிறது. உடனே நயன்தாரா அளித்த தொகை சுமார் 2 லட்சம். இத்தனைக்கு அந்தப் பையன் நயன்தாராவுக்கு தெரிந்த நாட்கள் வெறும் 5 மட்டுமே!
* நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரைப் போல படப்பிடிப்பு தளத்துக்கு மிகச் சரியான நேரத்துக்கு வர முடியாது. 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 7:55 மணிக்கு மேக்கப் எல்லாம் முடித்து படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். கேராவேனில் இருந்து மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார் என்றால் மதியம் மற்றும் மாலை வேலைகளில் ப்ரேக் விடுவார்கள். அப்போது தான் கேராவேனுக்கு செல்வார். காட்சிகள் இல்லாவிட்டாலும், படப்பிடிப்பு தளத்திலேயே உட்கார்ந்திருப்பார். ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று ஒரு இயக்குநர் கேட்டதற்கு, "சார்.. திடீரென்று நாயகன் அல்லது வில்லன் உள்ளிட்ட படக்குழுவினர் வர தாமதமாகலாம். அந்த சமயத்தில் நாயகியை வைத்து ஒரு க்ளோஸ்-அப் காட்சி எடுக்கலாமே என உங்களுக்குத் தோன்றும். அப்படி தோன்றும் போது நான் இங்கு இல்லையென்றால்.." என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
தெலுங்கில் 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற படத்தில் சீதையாக நடித்தபோது, ஒருநாள் கூட அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்துக் கொடுத்தார். அந்தளவுக்கு தொழில் மீது பக்தி.
* உதவியாளர்கள் மீது அக்கறை தன்னிடம் இருக்கும் உதவியாளர்கள் அனைவரிடமும் மிகுந்த அக்கறைக் கொண்டவர் நயன்தாரா. அது போலவே, அவர்களுக்கு மட்டும்தான் நயன்தாராவின் கோபமும் தெரியும். அவருடன் நீண்ட நாட்களாக பணியாற்றும் ராஜீவுக்கு வீடு, மறைந்த தன்னுடைய மேலாளர் அஜித்துக்கு கார் என தன்னிடம் பணிபுரிபவர்கள் யாருமே கஷ்டத்துடன் இருக்க கூடாது என்று நினைப்பார். தன்னிடம் பணிபுரிந்த ஒருவரின் மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அப்போது சென்னையில் வெள்ளம் வந்திருக்கிறது. நயன்தாராவோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். உடனடியாக தன்னிடம் இருந்தவருக்கு போன் செய்து "அவருடைய மனைவி எப்படி இருக்கிறார், அவருடைய வீடு வெள்ளம் பாதித்த பகுதியில் இருக்கிறது. உடனே போய் ஒரு லட்ச ரூபாய் கொடுங்கள். நான் இந்தியா வந்தவுடன் தருகிறேன்" என்று தெரிவித்தார் நயன்தாரா. அவர்கள் கொண்டு போய் பணம் கொடுக்கும் வரை, அடிக்கடி போன் செய்து என்னாச்சு என்று விசாரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
* மற்ற நாயகிகள் போல நயன்தாரா கிடையவே கிடையாது. எப்போது தன்னிடம் நடிப்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து சாக்லெட், பரிசுப் பொருட்கள் என ஏதாவது வந்து கொண்டே இருக்கும். தன்னுடம் இருப்பவர்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் அவருடைய எண்ணம். 'நண்பேன்டா' படப்பிடிப்பு தளத்தில் ஒரு லைட்மேனுக்கு குறைந்த அழுத்தம் வந்து மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். முதல் ஆளாக ஒடிச் சென்று, அவருடைய காலை எடுத்து தன் மீது வைத்து நன்றாக தேய்த்து முதலுதவி எல்லாம் செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் நயன்தாரா.
* நயன்தாராவுடன் ஒருநாள் பழகிவிட்டால் போதும், பிறகு எப்போது எங்கு பார்த்தாலும் அவரே நேரடியாக போய் பேசுவார். அவர்கள் வந்து தம்மிடம் பேசட்டுமே என்று எந்த ஒரு இடத்திலும் நினைக்கவே மாட்டார்.
* ஒருநாள் 'நண்பேன்டா' படத்தின் படப்பிடிப்பில் நயன்தாராவைக் காண ரசிகர்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. திடீரென்று இயக்குநரிடம் மைக்கை வாங்கிய நயன் "ஹாய் எவ்ரிபடி... இங்கு பல லட்சம் செலவு செய்து படப்பிடிப்பு நடத்துக்கிறோம். நீங்கள் படப்பிடிப்பைக் காணலாம், ஆனால் எதுவும் இடைஞ்சல்கள் வராமல் பாருங்கள்" என ஒரு பெரிய உரையே நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய உரைக்குப் பிறகு ஒரு சத்தம் இல்லாமல் படப்பிடிப்பு இனிதே நடந்திருக்கிறது.
* சமீபத்தில் ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்கு சென்றார் நயன்தாரா. அங்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து "எனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா, என்னால் நம்பவே முடியவில்லை" என்று தனது உதவியாளரிடம் மிகவும் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.
* சில பல பர்சனல் பின்னடைவுகளைக் கடந்து, இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு, நடிப்புத் திறமையைத் தாண்டி, அவரிடம் நிறைந்துள்ள நல்ல பண்புகளும் முக்கியக் காரணம் என்பார்கள் நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள்.
* நயன்தாராவின் நலம் விரும்பிகள் சிலரிடம் பேசியபோது, அவர்கள் அனைவரும் தவறாமல் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள். உலகின் பிரபல நடிகைகள் சிலரிடம் காணப்பட்ட விஷயம்தான். அது... "நயன்தாரா ரொம்ப வெகுளி சார். அவருடன் பழகிவிட்டால் கண்மூடித்தனமாக நம்பிவிடுவது பலம் என்றாலும், பல நேரங்களில் பலவீனமாகவும் மாறிவிடுகிறது."
இன்று - நவம்பர் 18 - நடிகர் நயன்தாரா பிறந்தநாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT