Published : 28 Nov 2015 04:41 PM
Last Updated : 28 Nov 2015 04:41 PM
'கௌரவம்' படத்தில் சறுக்கினாலும் இயக்குநர் ராதாமோகன் அதை அடுத்த படத்தில் சரிசெய்வார் என்ற நம்பிக்கை, கருணாகரன், நந்திதா நடிப்பில் உருவாகும் படம், ட்ரெய்லரில் உருவான சுவாரஸ்யம் போன்ற இந்தக் காரணங்களே உப்பு கருவாடு படத்தைப் பார்க்கத் தூண்டின.
மென்மையான உணர்வுகளை உணர்த்தும் விதத்தில் படம் இயக்கும் ராதாமோகனை மனதுக்குள் நினைத்தபடி தியேட்டருக்குள் நுழைந்தோம்.
கதை: இயக்குநராக ஜெயிக்க வேண்டும். அதில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் போராடுகிறார் கருணாகரன். ஆனால், பலர் இம்சைகளாக மாறி தடுக்கின்றனர். அதற்குப் பிறகு கருணாகரன் படம் எடுக்கிறாரா? காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறாரா? ஜெயிக்கிறாரா? என்பது மீதிக் கதை.
நகைச்சுவை நடிகர், குணச்சித்ர நடிகர் என்ற நிலையில் இருந்து கதாநாயகன் ஆக புரமோஷன் ஆகியிருக்கும் கருணாகரனுக்கு வாழ்த்துகள். கதைத் தன்மைக்கேற்ப கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். கலைஞனுக்குரிய கோபம், விரக்தி, பிரச்சினையை சமாளிப்பது, லட்சியத்துக்காக உழைப்பது என்று எல்லா விதத்திலும் பொருந்துகிறார்.
நந்திதாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். இயல்பு வாழ்க்கை, சினிமா நடிப்பு என இரண்டிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். அதுவும் நந்திதா ஆடிப் பாடி, வசனம் பேசும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார். 'அதுக்கு நான் என்ன பண்ணணும்?' என்ற ஒரு வரி வசனத்தை சொல்லும் நந்திதாவின் வெரைட்டி நடிப்புக்கு ஆயிரம் லைக்ஸ்.
'டவுட்டு' செந்தில் ரியாக்ஷன்களில் பின்னி எடுக்கிறார். 'சண்முகத்தை புண்படுத்துறதா சொல்றாங்களே அந்த சண்முகம் யார் சார்?' என கேட்கும்போதும், தப்பு தப்பாக ஆங்கிலம் பேசும்போதும், பாடகரிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகளில் உறைந்து போய் நிற்கும் போதும் 'டவுட்டு' செந்தில் வெயிட்டு செந்தில் ஆக நிற்கிறார். இவரின் நடிப்புக்காகவே இன்னும் பல வெளிச்ச வாய்ப்புகள் கிடைக்கும் என தாராளமாக நம்பலாம்.
கோபமுகம் காட்டி உதார் விடும் தொழிலதிபர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கட்டத்தில் சிரிப்புக்கு கியாரண்டி தருகிறார். 'ஐ போனுக்கு அழகழகா பவுச் வாங்குறான். அப்பா அம்மாவை வெளியே தள்ளி கதவை சாத்துறான் என்று அவர் சொல்லும்' கவிதை இம்சைக்கு சிரித்துத் தள்ளுகிறது ரசிகர் கூட்டம்.
'சத்தியம்' சொல்லும் மயில்சாமி, திருக்குறள் சொல்லியே எனர்ஜி ஏற்றும் சாம்ஸ், ட்ரெண்ட் அப்டேட்டில் கவனம் செலுத்தும் நாராயண் லக்கி, மீனவ கர்ணனாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர் தம்பியாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து, கருணாகரன் காதலியாக வரும் ரக்ஷிதா, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஃபிரேம் பற்றி பெரிய கவலை இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் என்று மகேஷ் முத்துசாமியின் கேமரா பயணித்திருக்கிறது. ஸ்டீவ் வாட்ஸ் இசை சொல்லிக்கொள்ளும் படி இல்லை. பாடல்களும் ரசிக்கிற ரகம் இல்லை.
ராதாமோகன் சார் எப்படியாவது மறுபடியும் வித்யாசாகர் கூட இணைஞ்சுடுங்களேன்... ப்ளீஸ்...
எடிட்டர் ஜெய் அந்த குத்துப்பாடல் உள்ளிட்ட பல இடங்களில் தயங்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.
நல்ல கதையை வைத்துக்கொண்டு அதை காமெடிப் படமாக கொடுப்பதா?, இல்லை இயக்குநருக்கு ஏற்படும் இம்சைகள், தடைகளை அடுக்குவதா? என்று தெரியாமல் திண்டாடி இருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.
கிளிஷேக்கள், நாடகத்தனம் ,திரைக்கதை வேறு திசையில் பயணிப்பதால் படமும் நீண்ட நேரம் பார்ப்பதைப் போன்ற அலுப்பையும், சோர்வையும் தருகிறது.
மொத்தத்தில் 'உப்பு கருவாடு' காயவைக்கிறது.
'மொழி' எடுத்தவர் என்ன மச்சான் இப்படி ஒரு படம் கொடுத்திருக்கார் என்று ஒரு ரசிகன் அதிர்ச்சியோடு பேசிக்கொண்டு சென்றதை யாராவது இயக்குநரின் காதுகளுக்குக் கொண்டு போய் சேர்க்கட்டும்.
ராதாமோகன் சார் நீங்க 'மொழி', 'அபியும் நானும்', 'பயணம்' படங்கள் தந்த பழைய ராதாமோகனா வரணும் சார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT