Published : 06 Feb 2021 06:19 PM
Last Updated : 06 Feb 2021 06:19 PM
தமிழ் திரையிசைப் பாடல்கள் வரலாற்றில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவரான பிறைசூடன் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதியதன் மூலம் தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக முதல் தடம் பதித்தார்.
முதல்கட்ட முத்திரைகள்
தொடர்ந்து 80களில் இசைக்கொடி நாட்டி ஆண்டுகொண்டிருந்த இளையராஜா இசையில் ’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார். ’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பிறைசூடன் எழுதியதுதான்.
இதற்கடுத்த ஆண்டில் ‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் இன்றுவரை திருமண வரவேற்பு மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் பாடலாகத் திகழ்கிறது.
“புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும் பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோனும்//மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கனும் மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு// உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி இருந்தா ஊரறிய மாலை கட்டிப்போடு//சொத்து வீடு வாசல் இருந்தாலும் சொந்த பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் உள்ள ரெண்டு ஒட்டாவிட்டால் கல்யாணம்தான் கசக்கும்//” என்பது போன்ற வரிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் திருமண ஜோடிகளின் மனப்பொருத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பார்.
அதுவே அந்தப் பாடல் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் அனைவராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதே ஆண்டில் இயக்குநர் வசந்தின் அறிமுகப்படமான ‘கேளடி கண்மணி’யில் பிறைசூடன் எழுதிய ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ என்னும் பாடல் அதன் இளமைத் துள்ளலான இசையமைப்புக்காக மட்டுமல்லாமல் பாடல்வரிகளுக்காகவும் ரசிக்கவைப்பது.
அந்தப் பாடலில் முதல் சரணத்தின் முடிவில் //பித்தம் நீ தித்தித்தாய் பக்கம்தான் வா வா// என்று ஆண் பாடுவது போலவும் இரண்டாம் சரணத்தின் முடிவில் //நித்தம் நீ தித்தித்தாய் பக்கம்தான் வா வா// என்று பெண் பாடுவதுபோலவும் எழுதியிருப்பார். இதில் இரண்டு இடங்களிலும் நித்தம் என்றே இருந்திருந்தாலும் பாடலின் சூழலுக்கான பொருத்தமோ பொருட்சுவையோ குறைந்துவிடப் போவதில்லை.
ஆனால் இரண்டு இடங்களில் ஒரே சொல்லை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதேபோல் ஒலிக்கும் வேறோரு சொல்லை, அதுவும் பொருட்சுவையுடன் இருக்கும் சொல்லைத் தேர்ந்தெடுத்திருப்பார்.
மேலும் பித்தம் என்பது பொதுவாக கசப்புடன் தொடர்புபடுத்தப்படும் சொல். காதலியை ‘நீ பித்தம் என்றாலும் தித்திக்கிறாய்’ என்று காதலன் வர்ணிப்பதில் ஒரு அழகான முரண் சுவையும் வந்துவிடுகிறது.
மெட்டுக்குள் குறிப்பிட்ட சந்தததின் எல்லைக்குட்பட்டு எழுதினாலும் தன் மொழி மேதமையையும் கவித்திறனையும் நுட்பமாகக் காண்பித்திருக்கிறார் பிறைசூடன்.
1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’. பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் அவர் எழுதியதே.
அதே ஆண்டில் ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் சேர்ந்து பிறைசூடனின் வரிகளும் காதல் தோல்வியின் தீரா வலியை கேட்பவர் அனைவரையும் உணர வைத்தது. ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என அந்த ஆண்டில் பிறைசூடன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்களின் பட்டியல் நீள்கிறது
’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ பிறைசூடன் எழுதிய மற்றுமொரு புகழ்பெற்ற வெற்றிப் பாடல். ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார்.
அந்தப் படத்தின் நாயகன் தன்னை தூக்கி வளர்த்த தந்தைவழிப் பாட்டியின் கோபத்தை போக்கும் வகையில் பாடும் ‘நடந்தால் இரண்டடி’ என்னும் பாடல் கதைச் சூழல் பொருத்தமும் பொருட்செறிவும் நிறைந்த வரிகளைக் கொண்டு ரசிகர்களை ஈர்த்தது.
பல இசையமைப்பாளர்களுடனான பயணம்
1990களில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் நாயக அறிமுகப் பாடலும் ‘சந்திரனே சூரியனே’ என்னும் பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.
தேவா இசையில் ‘தாயகம்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அந்தப் படத்தின் பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இரண்டாம் முறை வென்றார்.
தேவா இசையமைத்த ‘குரோதம் 2’, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களான ’சத்ரிய தர்மம்’ போன்ற படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் மட்டுமல்லாமல் வசனங்களையும் எழுதினார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார். ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ என்னும் வேகநடை கொண்ட காதல் பாடலை எழுதினார்.
தமிழ்த் திரையிசை உலகின் சகாப்தங்களான எம்.எஸ்.வி. இளையராஜா, ரகுமான் ஆகிய மூவரின் இசையிலும் பாடல்களை எழுதிய அரிதான பெருமையைப் பெற்றவர்களில் ஒருவர் பிறைசூடன்.
புத்தாயிரத்திலும் மூத்த இசையமைப்பாளர்கள், இளம் இசையமைப்பாளர்களுடனும் தொடர்ந்து பணியாற்றிவந்தார் பிறைசூடன். 2010இல் ‘நீயும் நானும்’ படத்துக்காக ஸ்ரீராம் விஜய் இசையில் எழுதிய பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதை மூன்றாம் முறையாக வென்றார்.
மாறாத பக்தி மணம்
2011இல் தெலுங்கு-தமிழ் இருமொழிப் படமான ‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பில் அனைத்துப் பாடல்களையும் வசனங்களையும் எழுதினார். இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தில் இறைநம்பிக்கையும் பக்தியும் கொண்ட பிறைசூடனின் எழுத்துப் பணி ராமனின் மேன்மையையும் சீதையின் உத்தம குணங்களையும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க உதவிற்று.
பாடல்களைத் தாண்டி
திரைப் பாடல்களைத் தாண்டி நிறைய பக்திப் பாடல்களை எழுதியுள்ளார் பிறைசூடன். அவருடைய கவிதைகள் ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. தமிழ் மொழிப் புலமையும் திரையிசைப் பாடல் வரிகளின் நுட்பங்களை விளக்கும் திறமையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மேடைப் பேச்சுகள் மூலம் வெளிப்பட்டு பிறைசூடன் மீதான தமிழ் மக்களின் மதிப்பை அதிகரித்துள்ளன.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ள கவிஞர் பிறைசூடன் இன்னும் பல்லாண்ட் காலம் வாழ்ந்து கவிநயத்துடனும் இலக்கிய நுட்பத்துடனும் பகதிமணத்துடனும் மொழிப்புலமையுடனும் தேமதுரத் தமிழை பாரெங்கும் பரப்ப வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT