Published : 03 Feb 2021 05:32 PM
Last Updated : 03 Feb 2021 05:32 PM

'மாநாடு' தலைப்பின் பின்னணி: இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்

சென்னை

'மாநாடு' படத் தலைப்பின் பின்னணி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இன்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

"'மாநாடு' என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். முந்தைய படங்களை விடப் புதிதாக சில விஷயங்களை முயன்றுள்ளேன். ரசிகர்கள் அதைப் படம் பார்க்கும்போது உணர்வார்கள். இதுதான் கதை என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் காட்சிகளாகப் பார்க்கும்போது உடனே புரிந்துவிடக் கதையாக இது இருக்கும்.

சிம்புவுக்கு ஒரு புதிய பரிமாணமாக இருக்கும். ஒரு மாநாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்தில் காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். வேறமாதிரி ஒரு அரசியலைக் காட்டியிருக்கிறேன். படத்தின் களமே மாநாடுதான். ஒரு மாநாடு நடந்தால் அந்த ஊர் எப்படியிருக்கும், அதற்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படமே. அதனால் தான் 'மாநாடு' எனத் தலைப்பு வைத்துள்ளோம்".

இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x