Published : 27 Nov 2015 05:25 PM
Last Updated : 27 Nov 2015 05:25 PM
அனுஷ்கா - ஆர்யா இணைந்து நடிக்கும் படம், சைஸ் ஜீரோ பற்றிய படம் என்ற இந்தக் காரணங்களே 'இஞ்சி இடுப்பழகி' மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய தாக்கத்தில் உற்சாகத்துடன் தியேட்டரில் நுழைந்தோம்.
அனுஷ்காவின் ரசிகர்கள் இத்தனை நாள் எங்கிருந்தார்கள்? ஒட்டு மொத்த தியேட்டரையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு வரிசை கட்டி குழுமியிருந்தனர். கல்லூரி இளசுகள் அதிக இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தனர்.
அனுஷ்கா பெயரைக் கூட டைட்டில் கார்டில் போடவில்லை. அதற்குள் விசிலடித்தும், கரவொலி எழுப்பியும் தங்கள் ரசிக அபிமானத்தை வெளிச்சப்படுத்தினர்.
படம் எப்படி?
உடல் எடை அதிகம் இருக்கும் நாயகிக்கு தொடர்ந்து திருமண முயற்சிகள் தடைபடுகிறது. ஏன் தடைபடுகிறது? அவரை சமூகம் எப்படிப் பார்க்கிறது? அதனால் நாயகிக்கு வரும் பிரச்சினைகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்கிறார்? திருமணம் ஆகிறதா? என்பது மீதிக் கதை.
குண்டான பெண்ணை இந்த சமூகம் ஏன் குறையோடு பார்க்கிறது? என்பதை உணர்த்துவதற்காகவும், குண்டான பெண்ணின் பாசிட்டிவ் பக்கத்தையும் பதிவு செய்த விதத்தில் பிரகாஷ் கோவலமுடியின் முயற்சி பாராட்டத்தக்கது.
உடல் எடை அதிகம் கொண்ட நாயகி கதாபாத்திரத்தில் அனுஷ்காவின் நடிப்பு ஆஸம்... ஆஸம்... ஒட்டு மொத்த படத்தின் பலத்தையும் ஒரே நபராகத் தாங்குவது அனுஷ்காதான்.
ஒரு கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக எந்த மேக் அப் ட்ரிக்ஸ் செய்யாமல், பொய்யாக சதை பிடிப்பான தோற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்யாமல் உடல் எடையை வொர்க் அவுட் செய்து கூட்டியதற்காக அனுஷ்காவைப் பாராட்டியே ஆக வேண்டும்.
துயரம், அன்பு, மன உளைச்சல், அழுகை, பொறாமை, விரக்தி என அத்தனை நிலைகளையும் தன் நடிப்பால் அசாதரணமாகக் கடந்து போகிறார். அதுவும் பொறாமை எட்டிப் பார்க்கும் தருணங்களில் அனுஷ்காவின் ரியாக்ஷன்கள் சிரிக்க வைக்கின்றன.
'இத்தனை நாளா உன் பொண்ணுன்னு நினைச்சேன். இப்பதான் தெரியுது நான் பிரச்னை'ன்னு என ஊர்வசியிடம் அனுஷ்கா பேசும் காட்சியில் ரசிகர்கள் கேரக்டரை உள்வாங்கத் தொடங்கியிருந்தனர்.
25 படங்களைக் கடந்த பிறகும் ஆர்யா நடிப்பில் பார்யா என்று சொல்ல வைக்கவில்லை. வழக்கம்போலவே வந்து போகிறார்.
'நான் உத்தமவில்லி' என்று சொல்லும் ஊர்வசி அந்த கிளைமாக்ஸ் காட்சியில் தன்னை நிரூபிக்கிறார். பிரம்மானந்தம், பிரகாஷ்ராஜ், மாஸ்டர் பரத், சோனல் சௌஹன் ஆகியோருக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.
ரா -ஒன் படத்தின் திரைக்கதை ஆசிரியர் கன்னிகா திலோன் 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். ஆனால், காட்சிகள் காமோ சாமோ என்று நகர்கின்றன. முதல் பாதி முழுக்க ஜாலி என்ற பெயரில் ஜல்லி அடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் வந்திருக்க வேண்டிய காட்சிகள் இதான் டா முன்னாடி வந்திருக்கணும் என்று ரசிகர்கள் கூவத் தொடங்கிவிட்டனர்.
அதுவும் ஆர்யா அனுஷ்காவைப் பார்க்கும்போது ஷாக் பத்தலை, ஷாக் பத்தலை என்று கத்தி கத்தியே ரசிகர்கள் டயர்ட் ஆனதை எங்கே போய் சொல்வது?
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான படம் என்பதால் மரகதமணி இசையமைப்பாளராக இருந்தும், பாடல்கள் சொல்லிக்கொள்ளும் ரகம் இல்லை. சைஸ் செக்ஸி பாடல் மட்டும் ஓ.கே. நடிகர்களின் உதட்டசைவுகள் தமிழில் ஒட்டுவேனா? என்று அடம்பிடித்திருக்கிறது.
நீரவ் ஷாவின் கேமரா எந்த ஆச்சர்யத்தையும் நிகழ்த்தவில்லை. அலுங்காமல் குலுங்காமல் தெலுங்கு பட லுக்கைத் தர மட்டும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனந்த் சாயின் கலை இயக்கம்மிகுந்த நிறைவைத் தந்தது.
விழிப்புணர்வுக்காக செய்யும் சின்ன சின்ன கேம் ஐடியாக்கள் மட்டும் படத்தில் பளிச்சிடுகின்றன. மொத்தத்தில், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அனுஷ்காவைப் பிடிக்கும் ரசிகர்கள் மட்டும் பார்க்கக் கடவது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT