Published : 04 Jun 2014 11:50 AM
Last Updated : 04 Jun 2014 11:50 AM
'யாமிருக்க பயமே' U சான்றிதழோடு வெளியாகி இருந்தால் இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார்கள் தமிழ் திரையுலகில்.
கிருஷ்ணா, கருணாகரன், ஒவியா, ரூபா மஞ்சரி உள்ளிட்ட பலர் நடிக்க, டி.கே இயக்கத்தில் வெளியான படம் 'யாமிருக்க பயமே'. எல்ரெட் குமார் தயாரிப்பில் மே 9ம் தேதி இப்படம் வெளியானது.
படத்திற்கு U/A சான்றிதழ் அளித்தார்கள் தணிக்கை அதிகாரிகள். ஒரு வேளை படத்திற்கு U சான்றிதழ் அளித்திருந்தால் இந்தாண்டின் மாபெரும் வசூலை வாரிக் குவித்த படமாக 'யாமிருக்க பயமே' அமைந்திருக்கும் என்றார்கள்.
எப்படி என்று விசாரித்ததில், "'யாமிருக்க பயமே' படத்தினை 3 கோடியில் தயாரித்து, 2 கோடி ரூபாயை விளம்பரத்திற்கு செலவு செய்து வெளியிட்டு இருக்கிறார் எல்ரெட் குமார். முதலில் இப்படத்தினை வாங்குவதற்கு எந்த ஒரு விநியோகஸ்தரும் முன்வரவில்லை.
அதனால், எல்ரெட் குமார் சொந்தமாக வெளியிட முடிவு செய்து, தனக்கு தெரிந்த விநியோகஸ்தர்கள் மூலமாக கமிஷன் அடிப்படையில் வெளியிட்டார். படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பலர் படத்தினை இரண்டாவது முறை, மூன்றாவது முறை திரையரங்கு சென்று குடும்பத்தோடு கண்டு களித்திருக்கிறார்கள். வாரத்திற்கும் வாரம் திரையரங்கம் அதிமாகியிருக்கிறதே தவிர யாருமே திரையரங்கில் இருந்து படத்தினை தூக்கவில்லை.
திரையரங்கில் இருந்து மட்டும் தயாரிப்பாளருக்கு 8 கோடிக்கும் அதிகமாக மொத்த வசூலில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அரசாங்கத்திற்கு வரி செலுத்திய பின்னும் 8 கோடி கிடைக்க இருக்கிறது. இப்படத்தினை Zee தமிழ் நிறுவனம் 3 கோடிக்கு வாங்கியிருக்கிறது. வெளிநாட்டு உரிமை, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ரீமேக் உரிமைகள் என தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமன்றி திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே லாபம் கொடுத்திருக்கிறது. "இப்படம் மட்டும் U சான்றிதழோடு வெளியாகி இருக்குமேயானால் கண்டிப்பாக இன்னும் மிக அதிக லாபம் கிடைத்திருக்கும்." என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT