‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; அப்பா நலமுடன் இருக்கிறார்’ - கமல்ஹாசன் மகள்கள் அறிக்கை

‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; அப்பா நலமுடன் இருக்கிறார்’ - கமல்ஹாசன் மகள்கள் அறிக்கை

Published on

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகர் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே கட்சிப் பணி, மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து கமல்ஹாசன் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது காலில் தொடர்ந்து வலி இருந்து வருவதாகவும், இதனால் மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசான் தெரிவித்திருந்தார். அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள், மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவரது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா இருவரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று காலை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். 4,5 நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார்.

அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in