Published : 15 Jan 2021 01:22 PM
Last Updated : 15 Jan 2021 01:22 PM
இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுசீந்திரன். 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்பு 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'ராஜபாட்டை' , 'பாண்டியநாடு', 'பாயும் புலி', 'ஆதலால் காதல் செய்வீர்', 'ஜீவா', 'மாவீரன் கிட்டு' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இவருடைய தந்தை பெயர் நல்லுசாமி. அவருடைய பெயரில் 'நல்லுசாமி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சுசீந்திரனின் சகோதரர் சரவணன். மேலும், ஒரு சகோதரர் மற்றும் சகோதரியும் இருக்கிறார்கள்.
பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்துள்ள 'ஈஸ்வரன்' படத்தை இயக்கியிருப்பதும் சுசீந்திரன்தான். அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தத் தருணத்தில் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமிக்கு இன்று (ஜனவரி 15) காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் காலை 11 மணியளவில் ஜெயலட்சுமி காலமானார். அவருக்கு வயது 62.
சுசீந்திரனின் தாயார் காலமானதற்குப் பல்வேறு திரையுலக பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT