Published : 11 Jan 2021 05:05 PM
Last Updated : 11 Jan 2021 05:05 PM
சின்னத்திரை நடிகர் சங்கப் பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்தது என்று சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"கடந்த மூன்றுமாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை நீடித்து ஒரு குழப்பமான நிலை நிலவியது. இப்போது அந்தப் பிரச்சினை தீர்ந்து சூழ்நிலை தெளிவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்கள் என் தலைமையிலான சங்கம் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்குரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக எம்.டி.மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மனோபாலா ராஜினாமா செய்தார். செயற்குழு உறுப்பினர்களாக இருந்த பி.வி.ஆர். சுப்பிரமணியம் என்கிற ஜெயந்த், கே.ரிஷி, விஜய் ஆனந்த், ஈஸ்வர், சிவ கவிதா, நீபா, ஆகியோர் அந்தப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர். அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சின்னத்திரை நடிகர் சங்கம் சார்ந்து நிலவிய குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. சங்க அலுவலகம் இன்றே திறக்கப்பட்டுவிட்டது. உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளலாம். இனி சங்கத்தின் நடவடிக்கைகள் துரிதமாக தொடங்கி நடைபெறும். சங்கத்திற்குப் புதிய இடம் வாங்கிக் கட்டிடம் கட்டித் திறப்பு விழா செய்யும் திட்டத்தோடு பணிகளைத் தொடங்குகிறோம்.
இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்ட பின்னும் மனோபாலா தரப்பு குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண அனைவரும் விரும்பினோம். மீண்டும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி முன்னிலையில் கூடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பதினொரு வாக்குகள் வித்தியாசத்தில் ரவிவர்மாவாகிய நான் வெற்றி பெற்றேன். எனவே இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது."
இவ்வாறு ரவிவர்மா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment