Published : 30 Oct 2015 10:23 AM
Last Updated : 30 Oct 2015 10:23 AM
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பைரவி’ தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் கால் பதிக்கிறார் கே.ஆர்.விஜயா. படப்பிடிப்பில் இருந்த அவரைச் சந்தித்தோம்.
‘‘இது போதும். இனி சிறிது காலம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று நடிப்பு விஷயத்தில் மட்டும் எனக்கு தோன்றுவதில்லை. நடிப்பு எனக்கு சுவாசத்தைப் போன்றது. அது இந்த வாழ்க்கை முழுக்க என் கூடவே இருக்கவேண்டும் என்று விரும்பு கிறேன். அதனால் தான் இப் போது மீண்டும் இந்த சின்னத் திரை பயணத்தை தொடங்கு கிறேன்” என்று பேசத் தொடங் கினார் கே.ஆர்.விஜயா.
இந்த தொடரில் நீங்கள் நடிக்க காரணம் என்ன?
நல்ல புரிதல்தான் காரணம். இந்த குழுவுடன் ஏற்கெனவே ‘ராஜ ராஜேஸ்வரி’ என்ற தொடரில் பணியாற்றியுள்ளேன். கதை வடிவமைப்பு முதல் அதை காட்சிப்படுத்துவது வரை இந்தக் குழுவினர் ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். அதோடு இவர்களுடன் ஏற்கெனவே நன்றாக பழகியிருப்பதால் மீண்டும் இணையும்போது அந்த புரிதல் நட்பை மேலும் கெட்டி யாக்குகிறது. இந்த தொடரை இயக்கும் செல்வகுமார் தொடங்கி தயாரிப்பு, நிர்வாகம் வரை புதுமையான, அதே நேரத்தில் ஒரு தொடர் வழியே நல்ல விஷயங்களையும் கொடுக்க அதிகம் முயற்சிக்கிறார்கள். அதனால் இந்த தொடரை தேர்வு செய்தேன். தொடர்ந்து இதுமாதிரி பல தொடர்களையும் ஏற்று நடிக்க தயாராகவும் இருக்கிறேன்.
நீங்கள் படங்களில் நாயகியாக நடித்த காலத்தில் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது இருக்கிறதா?
தற்போதைய படங்களில் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங் களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது இந்த காலகட்டத்தின் வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் சினிமா வழியே இந்த சமூகத்துக்கு தேவையான கருத்து களை வழங்கவேண்டும். நல்ல படங்களுக்கு எப்போதும் கதை தான் நாயகன்.
ஒரு காலத்தில் ஷூட்டிங்கில் பரபரப்பாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகு தனிமையாக இருப்பதாக சொல்கிறார்களே?
நான் என்னை எப்போ தும் பிஸியாகவே வைத்துக் கொள்வேன். இந்த பேட்டியை கூட ஷூட்டிங்கில்தான் கொடுக் கிறேன். வீட்டில் குடும்பத் தோடு இருக்கும்போது கொடுப்ப தில்லை. அங்கே குடும்ப உறவு களுடன் நேரத்தை செலவிடுவது தான் நல்லது என்பது என் கருத்து. அந்தந்த சூழலுக்கு தகுந்த மாதிரி நம் வேலையையும், நிகழ்வு களையும் வடிவமைத்துக் கொண்டு வாழ்வது நல்லது. என் கணவர் பிசினஸில் பிஸியாக இருப்பவர்.
ஆனால், நான் எப்போதும் சினிமாவை சார்ந்தே இருக்க வேண்டும் என்று நினைப் பவர். அதற்காகவே பெரிய திரையை வைத்து வீட்டிலேயே திரைப்படங்கள் பார்க்கும் சூழலை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இப்போது நான் நடிப்பை மீண்டும் கையில் எடுத்ததற்கு முக்கிய காரணமே இன்னும் நான் நடிப்பில் முழுமை அடைந்துவிட்டதாக எனக்கு தோன்றாததுதான். நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
திரைத்துறையில் அனுபவம் உள்ள நீங்கள் சீரியல்கள், திரைப் படங்களை தயாரிக்கலாமே?
அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. நடிப்பதில் மட்டும்தான் எனக்கு விருப்பம். அதனால் அதைத் தவிர வேறெதையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு சினிமாவில் நடித்த உங்களுக்கு சின்னத்திரை அனுபவம் எப்படி இருக்கிறது?
ஒரு படம் நடித்து, அது ரிலீஸாகி அதை ரசிகர்கள் கொண்டாடி அதற்கு கிடைக்கும் வரவேற்பை பெறுவதற்கு காலம் தேவை. சின்னத்திரை நடிப்புக்கு உடனுக்குடன் விமர்சனம் கிடைத்துவிடுகிறது. இது எனக்கு புதிதாக இருக்கிறது. இதை நான் ரொம்பவே ரசித்து செய்கிறேன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா போன்றவர்களின் மறைவு உங் களை எப்படி பாதித்தது?
பிரிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மிகப்பெரிய சாதனைகள் படைத்தவர்கள், திறமைசாலிகள், நம்மோடு, நம் அருகில் இருந்து நமக்கு நம்பிக்கை அளித்தவர்கள் இல்லை என்று நினைக்கும் போது அது அளவுக்கு அதிகமாக வலியை கொடுக்கிறது. இந்த விஷயத்தில் கடவுள் ஜெயித்து விடுகிறார்.
நான் நடிப்பை மீண்டும் கையில் எடுத்ததற்கு முக்கிய காரணமே இன்னும் நான் நடிப்பில் முழுமை அடைந்துவிட்டதாக எனக்கு தோன்றாததுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT