Published : 04 Jan 2021 12:29 PM
Last Updated : 04 Jan 2021 12:29 PM

‘ஈஸ்வரன்’ இசை வெளியீட்டு விழா சர்ச்சை: விமர்சனங்களுக்கு சுசீந்திரன் விளக்கம்

‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான சர்ச்சைக்கு இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஈஸ்வரன்'. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (02.01.2021) அன்று சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. இதில் சிம்பு, சுசீந்திரன், பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வால் பேசிக் கொண்டிருக்கும்போது அருகில் நின்றிருந்த சுசீந்திரன் அவரைப் பேசவிடாமல் இடையிடையே அவரைக் கிண்டலடித்துப் பேசிக் கொண்டிருந்தார். மேலும் அவரிடம் சிம்புவைப் பற்றி பேசுமாறும், ‘சிம்பு மாமா ஐ லவ் யூ’ என்று கூறுமாறும் கேலியாக சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த யாரும் அதனை அப்போது கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை. அங்கிருந்த ரசிகர் கூட்டமும் அதற்கு பலமாக கைதட்டி ஆராவாரம் செய்து கொண்டிருந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பலரும் சுசீந்திரனுக்கு நாகரிகம் தெரியவில்லையா என்கிற ரீதியில் கடுமையாகச் சாடி வந்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்குக் கடும் எதிர்வினைகள் கிளம்பிய நிலையில், இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான ஒரு வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாலியாகப் பேசிய விஷயம் தற்போது விமசிக்கப்பட்டு வருகிறது. ‘ஈஸ்வரன்’ படத்தில் நிதி அகர்வாலுக்கு சிம்புவை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒரு கதாபாத்திரம். படத்திலும் கூட ‘மாமா ஐ லவ் யூ’ என்ற வசனம் வரும். எனவே, படத்தின் கதாபாத்திரத்தின் அடிப்படையிலேயே அப்படிச் சொல்லச் சொன்னேன். ஆனால், அதனைப் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்''.

இவ்வாறு சுசீந்திரன் கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அருகில் நிதி அகர்வாலும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x