Published : 28 Dec 2020 01:54 PM
Last Updated : 28 Dec 2020 01:54 PM
ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார். அவருக்கு வயது 73.
இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியப் படங்கள் மட்டுமன்றி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், எப்போதுமே அம்மா கரீமா பேகத்தின் செல்லப் பிள்ளைதான்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 9 வயது இருக்கும்போதே, தந்தை ஆர்.கே.சேகர் காலமாகிவிட்டார். அதற்குப் பிறகு தாயார் அரவணைப்பில் வளர்ந்தவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். தனது பல பேட்டிகளில் இசையமைப்பாளராக உருவானதற்கு அம்மா எந்த வகையில் எல்லாம் உதவினார் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, பின்பு வீட்டிலேயே வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இன்று (டிசம்பர் 28) காலை சிகிச்சை பலனின்றி கரீமா பேகத்தின் உயிர் பிரிந்தது.
அம்மாவின் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். கரீமா பேகத்தின் பேரன் ஜி.வி.பிரகாஷும் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT