Published : 24 Dec 2020 06:21 PM
Last Updated : 24 Dec 2020 06:21 PM
'மாஸ்டர்' படத்துக்குத் தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெளியீட்டுப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையும் லலித் குமாரிடம் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, 'மாஸ்டர்' படத்தின் ஒட்டுமொத்தப் பணிகளையும் முடித்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. இதனால் எப்போது வேண்டுமானாலும் தணிக்கை குறித்த தகவல் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி இருந்தார்கள்.
படத்தின் தணிக்கையில் சில இடங்களை கட் செய்யச் சொன்னார்கள். அப்படிச் செய்யவில்லை என்றால் 'ஏ' சான்றிதழ் என்றார்கள். தணிக்கை அதிகாரிகளிடம் காட்சிகளுக்கான விளக்கம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறி பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக 'யு/ஏ' சான்றிதழை வழங்கினார்கள். இதனைப் படக்குழு உறுதி செய்துள்ளது.
'மாஸ்டர்' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்தாலும், வெளியீட்டுத் தேதியை இன்னும் உறுதிப்படுத்தாமல் உள்ளது. விரைவில் என்று மட்டுமே படக்குழுவினர் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் வெளியீட்டில் மாற்றம் இருக்குமோ என்ற பரபரப்பு நிலவுகிறது. ஏனென்றால், திரையரங்குகளில் இன்னும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான முதலீட்டை எடுத்துவிட முடியுமா என்ற தயக்கத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எந்தத் தேதியாக இருந்தாலும், தணிக்கைப் பணிகள் முடிவடைந்துவிட்டதால் வெளியீட்டுப் பணிகளை முடித்து வைத்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது படக்குழு.
See you soon#MasterUAcertified pic.twitter.com/w0k2rA43hd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 24, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT