Published : 21 Dec 2020 04:47 PM
Last Updated : 21 Dec 2020 04:47 PM
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தங்கம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் சாந்தனு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக் கதைகள்'. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளனர். இந்தப் படங்கள் அனைத்துமே ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதைகளாகும்.
ஒவ்வொரு ஆந்தாலஜி கதையும் ஒவ்வொரு தரப்புக்குப் பிடித்துள்ளது. இது தொடர்பான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தக் கதைகளில் சுதா கொங்கரா இயக்கிய 'தங்கம்' மற்றும் விக்னேஷ் சிவன் 'லவ் பண்ணா விட்றணும்' ஆகியவை சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
'தங்கம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
" 'தங்கம்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு படத்தின் வெற்றி இப்படித்தான் இருக்குமா, ஏனென்றால் இந்த உணர்ச்சி எனக்குப் புதிதாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு 12 வருடப் பசி என்று சொல்லலாம். நல்லதொரு படத்தில், நல்லதொரு இயக்குநர் கையில் இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இந்தத் தருணத்தில் 'தங்கம்' படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதையை எழுதிய ஷான், எங்கள் அனைவருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்த கலைராணி மேடம் என அனைவருக்கும் நன்றி. இவர்கள்தான் இந்தக் கதையின் நாயகர்கள் என்று சொல்வேன். இவர்களுடைய ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த வெற்றியை எங்களால் இப்போது கொண்டாடியிருக்க முடியாது.
சுதா மேடத்துக்கு முக்கியமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் இயக்குநர் என்பதற்காக மட்டுமல்ல. அவருக்கே தெரியாமல் அவர் ஒரு மிகப்பெரிய விஷயம் செய்துள்ளார். நான், காளிதாஸ், பவானி ஆகியோர் மாதிரி வளரும் நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் இவர்களாலும் நிரூபிக்க முடியும் என்று நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். சுதா மேடத்துக்கான நன்றியை ஒரு வீடியோவில் சொல்லிவிட முடியாது".
இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.
தற்போது விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் 'இராவணக் கோட்டம்' படத்தில் சாந்தனு கவனம் செலுத்தி வருகிறார்.
நன்றி - அன்றும் இன்றும் என்றும் #Thangam #PaavaKadhaigal pic.twitter.com/6i88DjHI7L
— Shanthnu ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 19, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT