Published : 17 Dec 2020 02:30 PM
Last Updated : 17 Dec 2020 02:30 PM
நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளியான திரைப்படங்களில் காதல் அறவே இல்லாத திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் காதல் இருந்துள்ளது. இது தவிர காதல் படங்கள் என்று சொல்லத்தக்க, காதலையே மையமாகக் கொண்ட காதலின் மேன்மையைச் சொல்லும் படங்களும் வந்துள்ளன. அவற்றில் சில படங்கள் காலத்தால் அழிக்க முடியாத காவிய அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இவற்றுக்கிடையில் 'காதல்' என்னும் சொல்லையே தலைப்பாகக் கொண்டு வெளியான காதல் படமும் ரசிகர்கள், விமர்சகர்களை வியக்கவைத்துக் காவிய அந்தஸ்தைப் பெற்ற படம்தான். 2004 டிசம்பர் 17 அன்று வெளியான அந்தப் படம் 16 ஆண்டுகள் கடந்த நிலையில் கூடுதல் பொருத்தப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ள படைப்பாகத் திகழ்கிறது.
கண்ணுக்குத் தெரியாத எதிரி
'காதல்' படம் காதலைப் பற்றியது மட்டுமல்ல. காதல் என்னும் இயற்கை உணர்வு சாதிகளாகப் பிரிந்துள்ள தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகளைப் பேசிய படம். பல படங்கள் காதலுக்கு எதிரிகளாகக் கண்ணுக்குத் தெரிந்த தனிநபர்களை வில்லனாகக் காண்பித்துக்கொண்டிருந்த நிலையில், சாதியம் என்னும் கண்களுக்குப் புலப்படாத சமூக யதார்த்தமே காதலின் முதன்மை எதிரியாக நின்று அது தோற்றுவிக்கும் வன்முறையைத் தோலுரித்த படம்.
ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாலாஜி சக்திவேல் இரண்டாவதாக இயக்கிய படமான 'காதல்' ஒரு படைப்பாளியாக அவருடைய முழுமையான வீரியத்தையும் தனித்தன்மையையும் தெளிவான சமூகப் பார்வையையும் எடுத்தியம்பியது.
உறையவைக்கும் யதார்த்தம்
மதுரையைக் களமாகவும் அந்த மண்ணின் மைந்தர்களைக் கதை மாந்தர்களாகவும் கொண்ட அந்தப் படம் மற்ற பல படங்களைப் போல் மதுரைக்காரர்களின் வீர தீரச் சூர பராக்கிரமங்களை விதந்தோதவில்லை. மாறாக அங்கு வாழும் ஒரு வசதிமிக்க குடும்பத்தின் செல்லப் பெண்ணுக்கும், ஏழை மெக்கானிக்குக்கும் இடையில் அரும்பும் களங்கமில்லாக் காதலைப் பேசியது. கூடவே மதுரை நகரத்து மண்ணையும் மக்களையும் இயல்பான உணர்வுகளுடன் பதிவு செய்தது.
வழக்கம்போல் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போய் சென்னையில் தஞ்சமடைகிறார்கள். அங்கு பல்வேறு ஊர்களிலிருந்து வந்து பேச்சிலர் அறைகளில் தங்கிக் குறைந்த சம்பளம் தரும் ஊழியங்களைச் செய்துவரும் இளைஞர்கள் அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அன்பு வார்த்தை பேசி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அதற்குப் பிறகு கடைசி 15-20 நிமிடங்களில் நடப்பவை அனைத்தும் பார்ப்பவர்களை உறைய வைத்தன. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களை அடித்துத் துவைத்து கொலை மிரட்டல் விடுத்துப் பிரித்துவிடுவதும், பொதுவாக மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் தாலியை அதை அணிந்திருக்கும் பெண்ணையே கழற்றி வீசச்செய்வதும் இதற்கெல்லாம் சாதியமும் அதன் பெயரால் பேணப்படும் 'குடும்ப கெளரவமும்' உந்துசக்தியாக இருக்கும் சமூக யதார்த்தத்தை முகத்தில் அறைந்தார்போல் போட்டுடைத்த காட்சிகள் அவை.
பாசத்தின் இன்னொரு முகம்
பொதுவாகச் சாதியவாதிகள் முரடர்களாக மட்டும் பேச்சிலும் பழக்கவழக்கத்திலும் மிக மென்மையாக இனிமையாகப் பாசமாக இருப்பவர்களிடமும் அடி ஆழத்தில் சாதிவெறி என்னும் நெருப்பு கனன்றுகொண்டே இருக்கும். 'காதல்' படத்தில் வரும் நாயகியின் சித்தப்பா கதாபாத்திரத்தைப் போல. இப்படி ஒரு கதாபாத்திரம் தமிழ்த் திரைக்கு மிகவும் புதியது. ஆனால் உண்மையானது. சாதியக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை நம்பவைத்துக் கழுத்தறுப்பவர்களாக அப்படிப்பட்டவர்களே இருப்பார்கள். மேலும் அன்பையும் பாசத்தையும் பொழிந்து ஆசையாக ஊட்டி வளர்த்த அன்பு மகளை சாதியின் காரணமாகக் கொல்லவோ விதவையாக்கவோ தயங்காத குடும்பங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவையெல்லாம் இன்று நாம் கேள்விப்படும் சாதி ஆணவக் கொலை செய்திகளின் அங்கமாக இருக்கின்றன. ஆனால் இவை செய்திகளாவதற்கு முன்பே சமூகத்தில் இப்படி ஒன்று இருக்கிறது என்பதைக் காண்பித்து எச்சரித்த பாலாஜி சக்திவேலின் சமூக அக்கறை போற்றத்தக்கது.
நிகழாத மாற்றம்
தான் ஒரு பயணத்தில் சந்தித்த நபரின் உண்மைக் கதையை மையமாக வைத்துத்தான் பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கினார் என்றாலும் இப்படி ஒரு கதையைத் திரைப்படம் எனும் வெகுஜனக் கலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதைச் சரியாகச் செய்த நுட்பமும் பாலாஜி சக்திவேலின் மெச்சத்தக்க பண்புகள். கடைசியில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் சாதியால் பிரிக்கப்பட்டு பைத்தியம் பிடித்து பிச்சை எடுத்துத் திரியும் அவளது முன்னாள் கணவனுக்கு அடைக்கலம் தருவதுபோல் நம் சமூகத்தில் நம்பிக்கை தரும். ஆனால், இந்தக் கருத்தை முன்வைத்து ஒரு வெகுஜன சினிமா வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சாதியத்தால் காதல் திருமணங்கள் பிரிக்கப்படுவது சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றைத் தடுக்க அரசு நடவடிக்கைகளோ சமூக மாற்றங்களோ போதுமானவையாக இல்லை. அந்த நிலையை அடைய நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்னும் வெட்கத்துக்குரிய அவலநிலையில்தான் நாம் இருக்கிறோம்.
கேளிக்கைக்கும் குறைவில்லை
இதுபோன்ற சமூக அரசியல் முக்கியத்துவங்களைத் தாண்டி ஒரு வெகுஜன சினிமாவாக அசலான எளிய மனிதர்கள், இயல்பான உணர்வுகளுடன் பின்னப்பட்ட யதார்த்தமான காட்சிகளுடன் தரமான கேளிக்கைப் படமாகவும் 'காதல்' அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதே அதன் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம். மதுரைக்காரர்களின் குசும்பு, இளம் பெண்களின் துறுதுறுப்பு, சென்னையில் பேச்சிலர் மேன்ஷன்களில் அடைந்துகிடப்பவர்களின் வாழ்நிலை ஆகியவற்றை வைத்து இயல்பான நகைச்சுவையையும் உணர்வுப்பூர்வமான சென்டிமென்ட் காட்சிகளையும் அமைத்திருந்தார் பாலாஜி சக்திவேல். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் பெருநகரத்து அல்ட்ரா மாடர்ன் இளைஞராக நடித்திருந்த பரத் இந்தப் படத்தில் வட்டார வழக்கில் பேசும் எளிய மதுரைக்கார இளைஞனாகவே மாறியிருந்தார்.
இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான திறமையான நடிகையான சந்தியா கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிச் சிறப்பாக நடித்திருந்தார். நாயகியின் தந்தையாக 'காதல்' தண்டபாணி, சித்தப்பாவாக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நாயகியின் நண்பனாக 'காதல்' சுகுமார், மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் என அனைவரும் மண்ணின் சாயலையும் யதார்த்தமான நடிப்பையும் பிரதிபலித்து அசரவைத்தனர். மேன்ஷனில் தங்கி இருக்கும் உதவி இயக்குநரிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டுவரும் எளிய இளைஞர்களையும் அவர்களிடம் அந்த உதவி இயக்குநர் காட்டும் ஹோதாவையும் வைத்து உருவாக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் என்றென்றைக்கும் ரசித்துச் சிரிக்கவும் சினிமா கனவுகளுடன் திரியும் இளைஞர்களின் அவலநிலையை யோசித்து வருந்தவும் வைப்பவை.
பெறும் வெற்றிபெற்ற பாடல்கள்
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஷுவா ஸ்ரீதரின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஆல்-சென்டர் ஹிட் அடித்தன. அந்த ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் முதன்மை இடங்களைப் பெற்றது. பிரம்மாண்ட படங்களின் இயக்குநரான ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தரமான திரைப்படங்களைத் தயாரிக்கும் நிறுவனம் என்னும் அடையாளத்தை இந்தப் படம் பெற்றுத் தந்தது.
காதலை மையமாக வைத்துக் கலகலப்பான கேளிக்கையுடன் அதே நேரம் சமூக அவலங்களைப் பிரச்சார நெடியின்றி தோலுரிக்கும் வீரியமிக்க திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் நிரந்தர முக்கியத்துவத்தைப் பெறுகிறது 'காதல்'.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT