Published : 10 Dec 2020 11:01 AM
Last Updated : 10 Dec 2020 11:01 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரையுலக பிரபலங்கள் பலரும் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
சத்தியமாக நம்ப முடியவில்லை. கனவாக இருந்துவிடக் கூடாதா என்று தோன்றுகிறது. சித்ரா நேர்மறை சிந்தனை கொண்ட ஒரு பெண். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஆரம்பித்த போது அவர் கூறிய வார்த்தைகள் என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இது நமக்கான நேரம், இதை பயன்படுத்தி நாம் பெரிய ஆளாகி விட வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பார். அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று என்னால் யோசிக்க கூட முடியவில்லை. இதுவரை அவருடைய சோகத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். அவருடைய மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதயம் மிகவும் கனமாக இருக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு வெங்கட் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment