Published : 26 Oct 2015 11:40 AM
Last Updated : 26 Oct 2015 11:40 AM
நடிகர் சங்கத்துக்குள் கண்டிப்பாக அரசியல் இருக்காது என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அச்சந்திப்பில் விஷால் பேசிய போது, "நடிகர் சங்க கட்டிடம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சென்னைக்கு வருபவர்கள் 'நடிகர் சங்க கட்டிடத்தை பார்த்துவிட்டு வரலாம்!' என்கிற நிலை வரவேண்டும்.
கல்யாண மண்டபம், திரையரங்கம் உள்ளிட்ட விஷயங்கள் அனைத்துமே நாங்கள் ஒன்றாக பேசி முடிவு செய்வோம். என்னுடைய கல்யாணம் இப்போது முக்கியமில்லை. அக்கட்டிடத்துக்கு பூமி பூஜை போட வேண்டும், அது தான் என் முதல் ஆசை.
இத்தேர்தலில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்று பல்வேறு மதத்தினரும் கடவுளிடம் வேண்டியிருக்கிறார்கள். அதைக் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 'நலிந்த' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது, அது தான் என் ஆசை. அதற்கு தான் உழைக்கப் போகிறோம்.
3 வருட பணிகளில் முதல் வேலையாக SPI சினிமாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அடுத்ததாக கட்டிடம் எந்த மாதிரி, எப்படி கட்ட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு படம் பண்ணவிருக்கிறோம், அதன் இயக்குநர் யார் என்பது உள்ளிட்ட விஷயங்கள் இருக்கிறது. படம் ஒடினாலும் ஒடாவிட்டாலும் ஒரு படத்துக்கு குறைந்தபட்ச வியாபாரம் என ஒன்றிருக்கிறது. 4 நடிகர்களுக்கு சம்பளம் வேண்டாம் என்றாலே, அதுவே ஒரு பெரிய தொகை.
கலை நிகழ்ச்சிகள் மட்டும் பண்ணவே மாட்டோம். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஜனவரியில் CCL கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது, அதற்கு நடிகர் சங்கத்துக்கு ஒவ்வொரு வருடம் பணம் கொடுக்கிறார்கள். அது போக நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என்பது பற்றி முடிவு பண்ணவிருக்கிறோம். அது இப்போது தான் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
எந்த கட்சியைச் சார்ந்தவர்களும் நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். அது தான் எங்கள் நோக்கம். பொதுமக்கள் பிரச்சினைக்கு நடிகர் சங்கம் வருமா என கேட்கிறார்கள். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களுக்கு சேவை என்றால் தனிப்பட்ட முறையில் பண்ணிக் கொள்வோம். காவிரி பிரச்சினை உள்ளிட்ட விஷயங்களில் அரசாங்கம் தான் செயல்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நாங்கள் பங்கேற்க மாட்டோம். நிதி திரட்டும் வேலை மட்டும் பண்ணுவோம். நடிகர் சங்கத்துக்குள் அரசியல் இருக்காது.
நடிகர் சங்கத்தின் அறங்காவலராக கமல் சார் இருந்தார் என்றால் எங்களுக்கு பக்க பலமாக இருக்கும் என கேட்டோம். அவரும் சம்மதித்தார். நாங்களாக தன்னிச்சையாக முடிவு எடுத்தோம் என்று இல்லாமல், அவரிடம் கேட்டு பண்ணுவோம். அதனால் தவறுகள் நடக்காமல் இருக்கும். கமல் சார் உள்ளே இருக்கும் போது, வளர்ச்சி மிகவும் பெரிதாக இருக்கும் என நம்புகிறேன். முறைகேடுகள் என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து வெளியே சொல்வோம்.
நான் இப்போது தான் செயலாளராக பதவி ஏற்று இருக்கிறேன். ஆகையால், எங்களுடைய பதவிக் காலத்தில் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற பெயரே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT