Published : 01 Oct 2015 09:25 AM
Last Updated : 01 Oct 2015 09:25 AM
வருவான வரித்துறை சோதனைகளின் எதிரொலியாக, விஜய் நடித்த 'புலி' படம் திட்டமிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படுவதில் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில், திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியது என்றும், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் நம்மிடம் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது.
விஜய் உட்பட 'புலி' படத்தின் தயாரிப்பில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை புதன்கிழமை நடந்தது.
இதனால், திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான க்யூப் (QUBE) உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முறையாகச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், வெளிநாடுகளில் இப்படம் நேற்றிரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
க்யூப் தொழில்நுட்பத்துக்காக தொகை செலுத்தினால் மட்டுமே படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியும். இந்தச் சூழலில், 'புலி' படக்குழுவினர் அனைவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளதால், சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகே வங்கி கணக்கு உள்ளிட்டவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.
அதேநேரத்தில், க்யூப் தொழில்நுட்பத்துக்கு பணம் செலுத்தினால் மட்டுமே படம் வெளியாகும் என்பதால், திட்டமிட்ட நேரத்தில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஜெமினி லேப்-பில் 'புலி' படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
க்யூபுக்கு செலுத்த வேண்டிய பணம் அதிகமாக இருப்பதால், 10 மணிக்கு வங்கிகள் திறந்ததும் தான் தொகையை செலுத்த முடியும் என்பதால், அதற்குப் பிறகே படம் வெளியாக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்தது.
இந்த நிலையில், திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியதாகவும், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் நம்மிடம் 'புலி' தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது.
இன்று அதிகாலைத் தொடங்கி சிறப்புக் காட்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதே தவிர, வழக்கமான காலைக் காட்சிகள் தொடங்கி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு
ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி பல்வேறு திரையுலகினரும் #ISupportPuli என்ற பெயரில் அப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், விஜய் ரசிகர்களின் படத்துக்கான கொண்டாட்டமும் மற்றும் சில இடங்களில் விஜய் ரசிகர்கள் செய்துவரும் மறியல் பற்றிய செய்திகளும் கொந்தளிப்புடன் பகிரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாகி வருவது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, வருமான வரித்துறை சோதனை குறித்து வருமானவரித் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "நடிகர் விஜய்யின் ‘புலி’ திரைப் படத் தயாரிப்பில் கணக்கில் காட்டப்படாத பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில், இந்த சோதனை நடந்து வருகிறது" என்றார். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை தொடர்ந்தது. சென்னையில் மட்டும் 25 இடங்களில் சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT