Last Updated : 03 Dec, 2020 10:43 PM

 

Published : 03 Dec 2020 10:43 PM
Last Updated : 03 Dec 2020 10:43 PM

’ஒச்சாயி கிழவியாக காந்திமதி பிரமாதப்படுத்தினார்’ - பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ அனுபவங்கள்

‘மண்வாசனை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒச்சாயி கிழவியாக காந்திமதியம்மா பிரமாதமாக நடித்தார்’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணைய தள சேனலில், தன் திரை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை, ‘மண்வாசனை’ படத்தின் நாயகனாக்கினேன். இதைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளரும் நண்பருமான சித்ரா லட்சுமணன், கலைமணி உள்ளிட்ட பலருக்கும் ஷாக். என்னிடம் கேட்டார்கள். ‘சரி, ஜெமினி கணேசன் மாதிரி அழகா ஒரு நடிகனை தேடிப்புடிச்சுப் போட்டு படமெடுப்போம். இப்போ பேக் அப்’ என்று சொன்னேன். எல்லோரும் அதிர்ந்து போனார்கள். பிறகு அரைமனதுடன் ஒத்துக்கொண்டார்கள்.

நாளாகநாளாக, பாண்டியனின் நடிப்பு எல்லோருக்குமே பிடித்துவிட்டது. அந்த அளவுக்கு அவனை தயார் பண்ணினேன். லாங்வேஜ், பாடி லாங்வேஜ் என்று அந்த வீரணன் கேரக்டருக்கு அப்படியே பொருந்திப் போயிருந்தான். பாரதிராஜாவின் ஜட்ஜ்மெண்ட் மேல் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்று உடன் இருந்தவர்களிடம் கேட்டேன். பிறகு ‘இந்தக் கேரக்டருக்கு இந்தப் பையனைத் தவிர வேற யாரையும் நினைச்சுக் கூட பாக்கமுடியாது’ என்றார்கள்.

அடுத்து... காந்திமதி. ‘16 வயதினிலே’ படத்திலேயே குருவம்மா கேரக்டரில் பிரமாதம் பண்ணியிருந்தார்கள். இந்தப் படத்தில் ஒரு கிழவி கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தேன். ஒச்சாயி கிழவி. மதுரை லாங்வேஜில், எகத்தாளமாகப் பேசவேண்டும். சொல்லும்போதே நக்கல் இருக்கும். கலைமணி சிறப்பாக எழுதியிருந்தார். பேச்சில் சொலவடையும் கலந்தே இருக்கும். ரொம்பக் கஷ்டம் இப்படிப் பேசுவது. ஒவ்வொரு காட்சியும் அந்த அம்மா நடிக்கும் போது, பிரமிப்பாக இருந்தது. அப்படியே, ஒச்சாயி கிழவியாகவே வாழ்ந்தார். இப்போது காந்திமதியம்மா இல்லை என்பது வருத்தம் தான்.

அதேபோல வாணி. ரேவதியின் அம்மா கேரக்டர். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அவரைப் பற்றி சொல்லியாக வேண்டும். நான் நாடகம் போட்டுக்கொண்டிருந்த காலத்தில், என் நாடகத்தில் வாணி தான் நாயகி. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில், ‘சும்மா ஒரு கதை’ என்று நாடகம் போட்டேன். அதில் ஒரு கேரக்டர் கொடுத்தேன். ‘மண்வாசனை’யில் பின்னியிருப்பார். அடுத்து விஜயன். அந்தக் கேரக்டரில் அவர் வாழ்ந்திருப்பார்.

மியூஸிக். இளையராஜா. அன்பிலீவிபிள். இதில் வினுசக்ரவர்த்தி ஒரு ரோல் செய்திருப்பார். அவர் ரயில்வேயில் ஒர்க் பண்ணிக்கொண்டிருந்தார். அந்தக் காலத்திலேயே அவர் என்னிடம் கதை சொல்ல வந்தார். ’வண்டிச்சக்கரம்’ கதை பண்ணியிருந்தார். பிறகு ‘மண்வாசனை’ பண்ணும் போது அவரை வரச்சொல்லி, கேரக்டர் கொடுத்தேன். இப்படி எல்லாமே சிறப்பாக வந்திருந்தது.

காரணம்... மண் மீது வைத்த பாசம். என் அம்மாவின் மீது வைத்த பாசம். படத்தின் தொடக்கத்தில், என் அப்பாவையும் அம்மாவையும் காட்டியிருப்பேன். ’என் அப்பனையும் ஆத்தாளையும் இந்த மண்ணையும் வணங்கி...’ என்று சொல்லிவிட்டு ‘அன்புடன் பாரதிராஜா’ என்று போடுவேன்.

நான் பிறந்த கிராமத்தை நேசிக்கிறேன். பதினெட்டு வயது வரை வாழ்ந்தது, அப்போது அப்சர்வ் செய்தது, சோளக்காடு, கடலைக்காடு, களையெடுக்கும் பெண்கள், ஆடு மாடுகள், சாணி நாற்றம்... இதில் வாழ்ந்திருக்கணும். இதுவொரு சுகம். அதனால்தான் ‘மண்வாசனை’யை அவ்வளவு யதார்த்தமாகப் பண்ணினேன்.

கண்ணனின் ஒளிப்பதிவும் அருமை. மாடு தோற்றுவிட்டது என்றதும் விஜயனும் மாடும் நிற்கிற காட்சி, சூர்யோதயம். ரவுண்ட் டிராலி வசதியெல்லாம் கிடையாது. ‘அலைகள் ஓய்வதில்லை’யில் கார்த்திக், ராதா நடித்த காட்சிக்கு, ரவுண்ட் டிராலி போல், தோளில் கேமிராவைச் சுற்றிக்கொண்டு படமெடுத்தது போலவே இந்தக் காட்சியையும் எடுத்தார் கண்ணன்.

’மண்வாசனை’ எனக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது மட்டுமில்லை... சித்ரா லட்சுமணனை நல்ல தயாரிப்பாளராகவும் ஆக்கியது. ’மண்வாசனை’யை ஒரு படமாக எடுத்ததில் நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன்.

இதில் இன்னொன்று... கிராமங்களில் பெண்கள் பெரியமனுஷியாவது மிகப்பெரிய சடங்கு. படத்தில் முத்துப்பேச்சி பெரியமனுஷி ஆகிவிடுவாள். இரண்டு குடும்பத்துக்கும் சண்டை. வீரணந்தான் குடிசை போடவேண்டும். அப்போது ஏற்படும் பார்வை, மெல்லியதாக எட்டிப் பார்க்கும் காதல். பிறகு பள்ளத்தில் விழுவார் ரேவதி. ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாட்டு. இன்றைக்கு ரேவதி மிகப்பெரிய நடிகை. அன்றைக்கு சின்னதாக வெட்கப்படவேண்டும். இத்தனைக்கும் அவர் பரத நாட்டிய டான்ஸர். கடைசியில், ஒரு புல் எடுத்து அவர் இடுப்பில் கேமிராவுக்குத் தெரியாமல் உரசியதும், அவர் வெட்கப்பட்டார்.

‘மண்வாசனை’ மிகப்பெரிய வெற்றியைத் தந்தது’’.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x