Published : 03 Dec 2020 07:31 PM
Last Updated : 03 Dec 2020 07:31 PM

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு கார்த்தி வலியுறுத்தல்

சென்னை

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்தி கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு அறிமுகம் செய்த முக்கிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நாளும்‌ நம்‌ பசி தீர்க்க பாடுபடும்‌ இந்திய நாட்டின்‌ உழவர்கள்‌, பெருந்திரளாக கடும்‌ பனிப்பொழிவையும்‌, கரோனா அச்சத்தையும்‌ பொருட்படுத்தாமல்‌ 'உழவர்‌' என்ற ஒற்றை அடையாளத்துடன்‌ தலைநகர்‌ டெல்லியில்‌ கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில்‌ போராடி வருகின்றனர்‌. விவசாயத்தில்‌ பெண்களின்‌ பங்களிப்பும்‌ பெரும்பங்கு என்ற வகையில்‌ பெண்களும்‌ பெருந்திரளாகப்‌ பங்கெடுத்துப் போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாகப் பிரமிப்பூட்டுகிறது.

நாளும்‌, பொழுதும்‌ பாடுபட்டால்‌ தான்‌ வாழ்க்கை என்ற நிலையில்‌ தங்கள்‌ மாடு, கழனி மற்றும்‌ பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப்‌ பிரிந்து இந்தியாவின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ உள்ள விவசாயிகள்‌ தொலைதூரம்‌ பயணித்து வந்து தீரத்துடன்‌ போராடி வரும்‌ செய்திகள்‌ நம்‌ ஒவ்வொருவர்‌ உள்ளத்தையும்‌ உலுக்குகிறது!

தண்ணீர்‌ பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால்‌ ஏற்படும்‌ துயர்கள்‌, விளைப்‌ பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்ட‌ பல பிரச்சினைகளால்‌ ஏற்கனவே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்‌ உழவர்‌ சமூகம்‌, சமீபத்தில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண்‌ சட்டங்களால்‌ தாங்கள்‌ இன்னும்‌ மிக மோசமாகப் பாதிப்படைவோம்‌ எனக் கருதுகிறார்கள்‌.

தங்கள்‌ மண்ணில்‌ தங்களுக்கிருக்கும்‌ உரிமையும்‌, தங்கள்‌ விளைப்‌ பொருட்கள்‌ மீது தங்களுக்கிருக்கும்‌ சந்தை அதிகாரமும்‌ பெரும்‌ முதலாளிகள்‌ கைகளுக்கு இந்த சட்டங்களால்‌ மடைமாற்றும்‌ செய்யப்பட்டுவிடும்‌ என்றும்‌, ஆகவே இந்தச்‌ சட்டங்களை விலக்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதும்‌ அவர்களின்‌ வேண்டுகோளாக உள்ளது. ஆகவே, போராடும்‌ விவசாயிகளின்‌ குரலுக்குச் செவி சாய்த்து, அவர்கள்‌ கோரிக்கைகளைப்‌ பரிசீலித்து, உழவர்கள்‌ சுதந்திரமாகத் தொழில்‌ செய்வதை மத்திய அரசாங்கம்‌ உறுதிப்படுத்த வேண்டும்‌ என்பதே அனைத்து மக்களின்‌ எதிர்பார்ப்பு. அதை அரசு தாமதிக்காமல்‌ செய்ய வேண்டும்‌ என வலியுறுத்துகிறோம்‌"

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x