Published : 01 Dec 2020 12:45 PM
Last Updated : 01 Dec 2020 12:45 PM

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது; தீவிரச் செயலாற்ற வேண்டும்: பாரதிராஜா வாழ்த்து

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிரச் செயலாற்ற வேண்டும் என்று பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியினர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவருமே நாளை (டிசம்பர் 2) பதவியேற்கவுள்ளனர்.

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறும் விதமாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன். தயாரிப்பாளர்கள் இணைந்து வாக்களித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொறுத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன. இடைப்பட்ட காலங்களில் முடங்கிப்போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிரச் செயலாற்ற வேண்டும்.

முரளி ராம நாராயணனின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ, அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x