Published : 28 Nov 2020 07:07 PM
Last Updated : 28 Nov 2020 07:07 PM

'மாஸ்டர்' ஓடிடியில் வெளியீடா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து படக்குழு அறிக்கை

சென்னை

'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியீடு என்று பரவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகி வந்தது. அதனைத் தொடர்ந்து படக்குழு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 27) இரவு முதல் 'மாஸ்டர்' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலைக்கு வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு உண்டானது.

தற்போது அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'மாஸ்டர்' படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடரும் இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக, நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.

'மாஸ்டர்' திரைப்படத்தைத் திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் எவ்வளவு தூரம் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களைப் போலவே நாங்களும் அந்த மிகப்பெரிய தினத்துக்காகக் காத்திருக்கிறோம்.

கடந்த சில நாட்களாகப் பல வதந்திகள் உலவி வரும் நிலையில் அதற்குத் தெளிவு தர விரும்புகிறோம். பிரபலமான ஓடிடி தளத்திலிருந்து படத்தை வாங்க பேசப்பட்டாலும் நாங்கள் திரையரங்க வெளியீட்டையே விரும்புகிறோம். அதுவே தற்போது நிலவி வரும் நெருக்கடியில் துறைக்கு முக்கியத் தேவையாகும்.

தமிழ் திரைத்துறையை மீட்டெடுக்கத் திரையரங்க உரிமையாளர்களும் எங்களுடன் நின்று எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களைச் சந்திக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள்"

இவ்வாறு 'மாஸ்டர்' படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x