Published : 23 Nov 2020 05:24 PM
Last Updated : 23 Nov 2020 05:24 PM
‘’டிக்... டிக்... டிக்...’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்னுடைய நண்பன். இந்த ஒருபடத்தில்தான் நடித்தார். அந்தப் படத்துக்கு இணையான ஸ்டைலீஷ் எடிட்டிங்கை இதுவரை நான் எந்தப் படத்திலும் பார்த்ததில்லை’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில், தன் வாழ்க்கையை, திரை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில், பாரதிராஜா தெரிவித்திருப்பதாவது:
‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம். கடற்புரத்தில், காதலையும், சமூக மாற்றங்களையும் புகுத்தி, கொஞ்சம் புரட்சிகரமாகவும் செய்த படம் ‘அலைகள் ஓய்வதில்லை’.
என்னுடைய நண்பர் ஆர்.சி.பிரகாஷ். வடக்கத்தியக்காரர். நல்ல ரசனையுள்ள தயாரிப்பாளர். ஐ.வி.சசியை வைத்து இரண்டு மூன்று படங்கள் தயாரித்திருந்தார். எனக்கு நல்ல பழக்கம். இனிய நண்பர். எப்படியாவது என்னை வைத்து படம் பண்ண வேண்டும் என்று அவருக்கு ஆசை. சரி பண்ணுவோம் என்றேன்.
இந்த முறை கமர்ஷியலாகச் செய்யலாம் என்று யோசித்தேன். அதற்காகக் கதைகள் கேட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் செட்டாகவில்லை. எனக்கு தமிழ்வாணன் கதைகள், ஜேம்ஸ் ஆட்லி சேஸ் மாதிரி சின்னச் சின்னதான த்ரில்லிங் ஸ்டோரிகளை ரசித்திருக்கிறேன். அவருடைய கதை ’டைகர் பை தி டெய்ல்’ என்றொரு கதை படித்தேன். அதிலிருந்து ஒரேயொரு சின்ன விஷயத்தை மட்டும் இன்ஸ்பிரேஷனாக வைத்துக் கொண்டு கதை பண்ணினேன். அதுதான் ‘டிக்.. டிக்... டிக்...’. மூன்று நாயகிகள் சம்பந்தப்பட்ட படம். இந்தப் படமே ‘டிக்... டிக்... டிக்...’ ‘டிக்... டிக்... டிக்...’ என்றுதான் போய்க்கொண்டிருக்கும்.
படத்துக்கு தலைப்பே இதுதான் என்று சொன்னேன். திக் திக் திக் என்றுதான் இருக்கும் படம். டிக் டிக் டிக் என்றே இருக்கட்டும் என்றேன். உதவி டைரக்டர்களுக்கெல்லாம் திருப்தியே இல்லை. ’புரிகிற மாதிரி டைட்டில் வையுங்க சார்’ என்றார்கள். ‘புரியும், எல்லாருக்கும் பிடிக்கும் பாருங்க’ என்று சொன்னேன்.
மூன்று அழகிகளை உலக அழகியாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக வைரத்தை எப்படிக் கடத்துகிறார்கள் என்பதுதான் கதை. அந்த அழகிகளின் உடலுக்குள் அவர்களுக்கே தெரியாமல் வைரத்தை வைத்து ஆபரேட் செய்து, தைத்து, கடத்துவதாக கதை. இதில் கமல்ஹாசன் ஹீரோ. போட்டோகிராஃபர்.
இதை எப்படி கமர்ஷியலாக எடுப்பது என்று யோசித்தோம். மூன்று நாயகிகள். ராதா, ஸ்வப்னா, மாதவி. புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தியிருந்தேன். ‘எனக்கு எல்லா தர்மங்களும் தெரியும். எல்லா நியாயங்களும் தெரியும்’ என்று சொல்லுவார். வில்லன். அவர் என்னுடைய நண்பர். பெங்களூருவில் ஹார்ஸ் புக்கிங். மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
டெல்லியில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது ரொம்பவே பேசினான். ‘இதுமாதிரிலாம் தாட்பூட்னு பேசினே... உன்னை நடிக்க வைச்சிருவேன்’ என்று சொன்னேன். ‘நடிக்க வை பாப்போம்’ என்றான். இந்தப் படத்துக்காக அவனை பெங்களூரு போய் கூட்டி வந்தேன்.
மிகப்பெரிய ஹை ஃபேமிலி. சோழா ஹோட்டலில் தங்கவைத்து நடிக்க வைத்தேன். அவன் வீட்டுக்கெல்லாம் தெரியாது. இந்த ஒரு படம் தான் நடித்தான். ஆனாலும் மிகச்சிறப்பாகவே நடித்தான். படத்தைப் பார்த்தால் தெரியும் உங்களுக்கு.
ஒரு பிரச்சினை வந்தது எனக்கு. மூன்று பேரும் நன்றாக உடற்பயிற்சியெல்லாம் செய்யவேண்டும். டூ பீஸ் உடையில் நடிக்க வேண்டும். ஆனால் ராதா முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். மாதவி சம்மதித்தார். சொல்லப்போனால், மாதவி ரொம்பவே அழகாக இருந்தார். அப்படியொரு உடலமைப்பு மாதவிக்கு இருந்தது.
படத்தின் போஸ்டரே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘இதுமாதிரியெல்லாம் போஸ்டர் வருது’ என்று சட்டசபையில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு சென்ஸாரிலும் ஏகப்பட்ட கேள்விகள். பிறகு விட்டுவிட்டார்கள்.
அந்தப் படத்தை கொஞ்சம் ஸ்டைலீஷாக எடுக்கலாம் என்று ஆசைப்பட்டுத்தான் எடுத்தேன்.படத்தில் எடிட்டிங் பிரமாதமாக இருக்கும். இந்தப் படத்தின் எடிட்டிங் போல் இதுவரை எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை.
‘சிகப்பு ரோஜாக்கள்’ கூட எடிட்டிங் பண்ணிய விதத்தில் கொஞ்சம் கம்மியாக இருக்கும். ‘டிக் டிக் டிக்’ இன்னும் பிரமாதமாக இருக்கும்’’
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT