Published : 22 Nov 2020 04:29 PM
Last Updated : 22 Nov 2020 04:29 PM

தமிழ் சினிமா இன்றைக்குப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிற ஒரு நிலை: கருணாஸ் வேதனை

சென்னை

தமிழ் சினிமா இன்றைக்குப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிற ஒரு நிலையாக இருப்பதாக கருணாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.

இன்று (நவம்பர் 22) காலை முதலே தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் மற்றும் முரளி இருவரும் களத்தில் நிற்கிறார்கள். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தத் தேர்தலில் வாக்களித்துவிட்டு கருணாஸ் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"தமிழ் சினிமாவின் தாய் சங்கமான தயாரிப்பாளர் சங்கம் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கிறது. ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் தாய் பூமியாக இருந்த தமிழ் சினிமா இன்றைக்குப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிற ஒரு நிலை. இந்நிலையில் தமிழ் சினிமாவை மீட்டெடுக்கக் கூடிய பொறுப்பு இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ள நிர்வாகிகளுக்கு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை ஒரு நிர்வாகத்திலே இருக்கக் கூடியவர்கள், இன்னொரு நிர்வாகத்தில் ஈடுபடுவது சாத்தியமில்லை. ஏற்கனவே இது போன்ற ஒரு குழப்பங்கள் தான் நடிகர் விஷால் போட்டியிட்ட போது ஏற்பட்டது. இப்போதும் அதே போன்ற ஒரு நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு எத்தனையோ கோடிகளை இழந்து, இன்றைக்கு பரதேசிகளாக திரிந்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் சந்ததிகளையாவது அங்கீகரிக்கப்பட்டு அடையாளம் காட்டப்படும் பொறுப்பு இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு இருக்கிறது. அதை உணர்ந்து வரவுள்ள பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள்

இந்த தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் மார்டன் தியேட்டர் சுந்தரம். அவரைத் தொடர்ந்து பலரும் பொருளையும், இடத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ள சங்கம் இது. இதில் நடப்பில் படம் தயாரிப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருப்பார்கள். 10-12 பேரை வைத்துக் கொண்டு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாக்குவது எப்படிச் சரியாக இருக்கும். தவறு என்பது அனைத்து சங்கங்களும் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான். அதைச் சரி செய்து, சகிப்புத் தன்மையோடு செயல்படுபவர்கள் தான் பொறுப்புகளுக்கு வருவதற்குத் தகுதியானவர்கள். அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சி செய்வது தான் இது போன்ற புதிய சங்கங்கள் எல்லாம்"

இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x