Published : 20 Nov 2020 04:19 PM
Last Updated : 20 Nov 2020 04:19 PM

'சூரரைப் போற்று' அதிருப்தியாளர்களுக்கு ஜி.ஆர்.கோபிநாத் விளக்கம்

சென்னை

’சூரரைப் போற்று’ படம் பார்த்து அதிருப்தியடைந்த தனது நண்பர்களுக்கு ஜி.ஆர்.கோபிநாத் விளக்கமளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அவருடைய 'சிம்பிள் ஃப்ளை' புத்தகத்தை வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் சுதா கொங்கரா.

நவம்பர் 12-ம் தேதி வெளியான அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.

'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத்தும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார். மேலும், படத்துக்குப் புகழாரம் சூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு இருந்தார். தற்போது, ஜி.ஆர்.கோபிநாத்தின் நண்பர்கள் 'சூரரைப் போற்று' படத்தைப் பார்த்துவிட்டு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"'சூரரைப் போற்று' திரைப்படம் எனது புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லவில்லை என எனது சில பள்ளி, ராணுவ நண்பர்கள் மற்றும் டெக்கானில் சக ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது திரைப்படம் என்பதற்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது, அந்த மசாலாவுக்குக் கீழ் நல்ல ஆழமுள்ள விஷயங்கள் உள்ளன என்று அவர்களிடம் சொன்னேன். உண்மையை அப்படியே சொல்லியிருந்தால் ஆவணப்படமாகியிருக்கும். அதற்கு மதிப்பு உள்ளது. ஆனால் அது வேறு வகையான சினிமா.

ஒரு நாயகன் துணிச்சல் மிக்கவராகத் தெரியலாம். ஆனால் அவரும் பலவீனமானவர் தான். நாயகர்களுக்கும் குடும்பத்திடமிருந்து, மனைவியிடமிருந்து உணர்ச்சி ரீதியில் ஆதரவு தேவை என்பதை படம் காட்டுகிறது. நாயகனின் குழுவில் இருப்பவர்கள் நாயகனை விட அதிகமாகவே தியாகம் செய்கின்றனர்.

ஒரு மனைவியால் தனது கனவை விட்டுக் கொடுக்காமல் கணவரின் லட்சியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அவளால் தன்னைத் தாழ்த்திக் கொண்டு, தனது சொந்த அடையாளத்தையும், சுய மதிப்பையும் இழக்காமல் ஆணுக்கு ஆதரவு தர முடியும். கணவன் சோர்வடையும் போது அவனுக்கு ஊக்கம் தர முடியும்.

அபர்ணா மூலமாக சுதா இதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார். மேலும் இது, ஒவ்வொரு முறை வீழ்ந்த பின்பும் எழுச்சி பெறும் ஒருவரின் கதை. நான் தோல்வியைக் கண்டுவிட்டேன் ஆனால் நான் தோற்றுப்போனவனல்ல. நான் எப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறேனோ அப்போதுதான் நான் தோற்றுப் போனவன் என ஒருவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் கதை இது.

ஒவ்வொரு முறை விழும் போதும் நான் எழுவேன். இது விடாப்பிடியாக இருப்பதைப் பற்றியது மட்டுமல்ல, நல்லவர்களும் நம்மைச் சுற்றி உள்ளனர், சூரியன் நம் வானத்தில் உதிக்கும், கதவுகள் திறக்கும் என்று நம்புவதும் தான். இதுதான் இந்தத் திரைப்படத்தின் உண்மையான செய்தி. அதை நம்பும்படி, அட்டகாசமாக சூர்யா நடித்திருக்கிறார்"

இவ்வாறு ஜி.ஆர்.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x