Published : 16 Nov 2020 01:25 PM
Last Updated : 16 Nov 2020 01:25 PM
'ஃபேமிலி மேன் 2'வில் நடிக்கும் போது பல விதிகளைத் தான் உடைத்திருப்பதாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர்.
முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை உருவாக்க அமேசான் ப்ரைம் முடிவு செய்து அதற்கான பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்த சீஸனில் சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஓடிடி தளங்களில் முதன்முறையாக நடித்திருக்கும் சமந்தா, இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.
"விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓடிடி எங்களுக்கு வழங்குகிறது. 'தி ஃபேமிலி மேன்' தொடரில் நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். புத்தம் புதிதாகப் பல விஷயங்களைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன். இந்த சீஸனில் நடித்ததிலும், அதன் இறுதி வடிவத்தைப் பார்த்ததிலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல ஆச்சரியமாக இருக்கும்.
ஓடிடி ஒவ்வொரு கலைஞருக்கும் புதிய சாத்தியங்கள் நிறைந்த உலகத்தை அறிமுகம் செய்துள்ளது. திரைப்படங்கள் என்று வரும்போது ஒரு நடிகர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான குறிப்பிட்ட வகையான கதாபாத்திரங்களிலேயே நடிக்க வேண்டியிருக்கும். ஆனால், ஓடிடியில் பரிசோதனைகள் செய்து பார்க்க முடியும்" என்று சமந்தா பேசியுள்ளார்.
திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மாறியிருக்கிறதா என்று கேட்டபோது, "நான் திரைத்துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. நான் வந்த காலத்துக்கும் இப்போதைக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடந்துள்ளன.
உலக சினிமா அறிமுகம், ஓடிடி தளங்களின் வருகை எனப் பெண்களுக்கான வாய்ப்புகளும், தேர்வுகளும் நிலையாக அதிகரித்து வருகின்றன. முன்னைப் போல ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் எங்களை நடிக்க அழைப்பதில்லை" என்று சமந்தா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT