Published : 15 Nov 2020 07:33 PM
Last Updated : 15 Nov 2020 07:33 PM
பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்திக்கு சந்தானம் கிண்டலாக மறுப்பு தெரிவித்தார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிஸ்கோத்'. திரையரங்குகள் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்து, திறப்பது முடிவானவுடன் அவசரமாக படத்தை வெளியிட்டது படக்குழு. இதற்கான விளம்பரப்படுத்துதல் எதுவுமே நடைபெறவில்லை.
இந்நிலையில், இன்று (நவம்பர் 15) 'பிஸ்கோத்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்குச் சென்றார் சந்தானம். அங்கு ரசிகர்கள் மத்தியில் பேசியவர், பின்பு நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தானம் பேசியதாவது:
"கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு அனைவருக்குள்ளும் என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் இருந்தது. கரோனாவுக்கு முன்பு ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி சாரிடம் சொல்லி வியாபாரம் எல்லாமே முடித்துவிட்டோம். கரோனாவினால் அனைத்துமே தலைகீழாகிவிட்டது. ஓடிடியில் வெளியிட்டுவிடலாம் என்று தான் அனைவருமே பேசிக் கொண்டிருந்தோம்.
திரையரங்குகள் திறப்பது மாதிரி இருப்பதால் காத்திருக்கலாம் என்று சொல்லி, திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம். அவசர அவசரமாக தீபாவளிக்கு வெளியிட முடிவெடுத்தோம். மக்கள் திரையரங்கிற்கு வராமல் இருந்திருந்தால், ஓடிடி வெளியீட்டுக்கும் இந்தப் படத்தை கொண்டு போயிருக்க முடியாது. இத்தனை ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் இதே மாதிரி பயந்ததே இல்லை.
தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. சினிமா இருக்கிறது, நாங்கள் வருவோம் என்று அனைவருமே நம்பிக்கை கொடுத்துள்ளார்கள். இது எங்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வெற்றி. நடிகர்கள், இளம் இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே தமிழக மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளார்கள்.
இயக்குநர்கள், நடிகர்கள் என அனைவருமே திரையரங்கில் படம் வெளியாவதைத் தான் சந்தோஷமாக உணர்வார்கள். வியாபாரம் பண்றோம் பணம் வருகிறது என்பது கிடையாது. படம் வெளியாவது என்பது வியாபாரத்தைத் தாண்டிய ஒரு விஷயம். ஒரு கதையை எழுதி நடிகர்களை நடிக்க வைத்து திரையில் காண்பது என்பது பணத்தை விட மிகப்பெரிய விஷயம். அது திரையரங்கில் மட்டுமே கிடைக்கும். ஓடிடியில் கிடைக்காது.
கரோனா அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி எல்லாம் தொடர வேண்டும். அப்படி இருந்தால் வரும் காலத்தில் எந்தவொரு வைரஸும் நம்மை தாக்காமல் இருக்கும். இப்போது மட்டுமல்லாமல், நமது வாழ்க்கைமுறையில் ஒன்றாக மாறவேண்டும். 'பிஸ்கோத்' படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்திருப்பதால் இங்கு இருக்கிறோம். ஏதேனும் மாறி நடந்திருந்தால் கண்ணன் சார், நான் எல்லாம் இங்கு வந்திருக்கவே மாட்டோம்.
தயாரிப்பாளர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று நினைக்கும் ஹீரோக்கள் யாருமே கிடையாது. மனிதர்கள் யாருமே அவ்வளவு மோசமாக இருக்க மாட்டார்கள். அப்படியிருந்தால் அவர்கள் மனிதர்களே அல்ல. ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு நிறைய உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்”
இவ்வாறு சந்தானம் பேசினார்.
பின்பு "பாஜகவில் இணையப் போகிறீர்கள் என்று தகவல் வெளியானதே.." என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு சந்தானம், "இது 'பிஸ்கோத்' படத்தை விட பெரிய காமெடியாக இருக்கிறது. எதுக்குப்பா அதெல்லாம். முதலில் இருக்கிற வேலையைச் சரியாகச் செய்வோமே” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT