Published : 11 Nov 2020 08:54 PM
Last Updated : 11 Nov 2020 08:54 PM
85ம் ஆண்டு தீபாவளிக்கு ’கரையைத் தொடாத அலைகள்’, ’சமயபுரத்தாளே சாட்சி’, ’சிந்து பைரவி’, ’சின்ன வீடு’, ’படிக்காதவன்’, ’பிரேம பாசம்’, ’பெருமை’, ’ஜப்பானில் கல்யாணராமன்’ முதலான எட்டு திரைப்படங்கள் வெளியாகின.
‘கரையைத் தொடாத அலைகள்’ படத்தை இயக்குநர் பி.மாதவன் இயக்கியிருந்தார். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். ‘சமயபுரத்தாளே சாட்சி’ என்ற திரைப்படத்தில் நளினி, கே.ஆர்.விஜயா முதலானோர் நடித்தார்கள். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்தப் படத்தை ஓம் சக்தி எஸ்.ஜெகதீசன் இயக்கினார். ’பிரேமபாசம்’ எனும் திரைப்படம் சிவகுமார் நடிப்பில் வந்திருந்தது. ‘பெருமை’ என்றொரு படமும் இதேநாளில் வந்தது.
இந்த எட்டு படங்களில், ரஜினி நடித்த ‘படிக்காதவன்’, கமல் நடித்த ’ஜப்பானில் கல்யாணராமன்’, பாலசந்தரின் ‘சிந்து பைரவி’, பாக்யராஜின் ‘சின்னவீடு முதலான படங்களும் உண்டு. ரஜினி, சிவாஜி, அம்பிகா, நாகேஷ், விஜய்பாபு, ஜனகராஜ் முதலானோர் நடித்த இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கினார். சிவாஜியும் ரஜினியும் அண்ணன் தம்பியாக நடித்தார்கள். இளையராஜா இசையமைத்திருந்தார்.
கமல், ராதா, சத்யராஜ், கவுண்டமணி, கோவை சரளா முதலானோர் நடித்து ‘ஜப்பானில் கல்யாணராமன்’ வெளியானது. பஞ்சு அருணாசலம் தயாரித்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இளையராஜாதான் இசை. ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய ‘கல்யாண ராமன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜப்பானில் கல்யாணராமன்’ வெளிவந்தது. ஜப்பானில் ‘எக்ஸ்போ’ பொருட்காட்சி வெகு பிரபலம். அங்கெல்லாம் படமாக்கி பிரமிப்பூட்டியிருந்தது இந்தப் படம். ‘எக்ஸ்போ 85’ இதில் இடம்பெற்றது. இதேபோல், ‘எக்ஸ்போ 75’ ல் படமாக்கப்பட்ட படமும் உண்டு. மிகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற அந்தப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.
பாக்யராஜ் இயக்கத்தில் ‘சின்னவீடு’ வெளியானது. கல்பனா அறிமுகமானார். அனு என்ற நடிகையும் நடித்தார். கே.கே.செளந்தர், கோவை சரளா, ஜெய்கணேஷ் முதலானோர் நடித்தார்கள். இந்தப் படத்தில் கல்பனாவின் தம்பியாக சின்னப்பையன் நடித்திருந்தார். பின்னாளில், கமலின் ‘தசாவதாரம்’ படத்தில் கமலின் நண்பராக ஒரு காட்சியில் வருவார். ‘சலங்கை ஒலி’ படத்தில் போட்டோ எடுக்கும் சிறுவனாக நடித்திருந்தார். இந்த சின்னப் பையன் பின்னாளில், கமலை வைத்து ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தையும் அஜித்தை வைத்து ‘பில்லா 2’ படத்தையும் இயக்கினார்.
‘படிக்காதவன்’, ‘ஜப்பானில் கல்யாண ராமன்’, ‘சின்னவீடு’, ‘சிந்து பைரவி’ ஆகிய நான்கு படங்களுக்கும் இளையராஜாதான் இசை. நான்கு படங்களும் இசையில் பாடல்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ‘ஒரு கூட்டுக்கிளியாக’, ‘ஜோடிக்கிளி எங்கே?’, ‘ராஜாவுக்கு ராஜா நாண்டா’, ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்று எல்லாப் பாடல்களுமே ஹிட்டடித்தன. இதில் சிவாஜிக்கு மலேசியா வாசுதேவன் பாடியது அப்படிப் பொருந்தியது. ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ இன்று வரைக்கும் ஹிட் வரிசைப் பாடல்களில் ஒன்று!
இதேபோல், கமல் நடித்த ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்திலும் எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. ‘அம்மம்மோய்’, ‘சின்னப்பூ சின்னப்பூ’, ‘ராதே என் ராதே’ , ‘வாய்யா வாய்யா போய்யா போய்யா’ முதலான பாடல்கள் வெற்றியைப் பெற்றன.
பாக்யராஜின் ‘சின்னவீடு’ படத்திலும் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. ‘ஜாக்கிரதை ஜாக்கிரதை சின்ன வீடு ஜாக்கிரதை’, ’அட மச்சமுள்ள மச்சான்’, ‘சிட்டுக்குருவி வெக்கப்படுது’, ’வெள்ள மனம் உள்ள மச்சான்’ முதலான பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. மலேசியா வாசுதேவன் பாடிய ‘வெள்ள மனம் உள்ள மச்சான்’ பாடல், இன்றைக்கு வரை ஹிட்.
பாலசந்தரின் ‘சிந்து பைரவி’ படத்தைச் சொல்லவும் வேண்டுமா? இளையராஜா இசையில், சிவகுமார், சுஹாசினி, சுலக்ஷணா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், சிவசந்திரன், டி.எஸ்.ராகவேந்தர், மணிமாலா முதலானோர் நடித்திருந்தார்கள். ‘மஹாகணபதிம்’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘மரிமரி நின்னே’, ‘பாடறியேன் படிப்பறியேன்’, ‘நானொரு சிந்து’, ‘மோகம் என்னும் தீயில்’, ‘பூமாலை வாங்கி வந்தேன்’, ‘கலைவாணியே உனைத்தானே’, ‘தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ என்று எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
படிக்காத ரஜினி, ஜப்பானில் ஆவி ‘கல்யாணம்’ கமல், ‘சின்னவீடு’ வைத்து அல்லாடும் பாக்யராஜ், ஜே.கே.பி.யாக இசையுடன் வாழும் சிவகுமார் ஆகியோரை அவ்வளவு எளிதாக கடந்துவிடவோ மறந்துவிடவோ முடியாது.
இந்த நான்கு படங்களும் 85ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தீபாவளிக்கு வெளியானவை. வெளியாகி, 35 வருடங்களானாலும் ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’, ‘பாடறியேன் படிப்பறியேன்’, ‘அம்மம்மோய் அப்பப்போய்’, ‘வெள்ளை மனம் உள்ள மச்சான்’ முதலான பல பாடல்களாலும் படத்தின் வலுவான, ஜாலியான, யதார்த்தமான திரைக்கதையாலும் இன்றைக்கும் மனதில் மாறாத இடத்தைப் பிடித்திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT