Published : 16 Oct 2015 11:34 AM
Last Updated : 16 Oct 2015 11:34 AM

உடைகிறது தயாரிப்பாளர் சங்கம்?- தாணுவுக்கு எதிராக அவசரக் கூட்டம்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மீது அதிருப்தியில் இருக்கும் தயாரிப்பாளர்களின் கூட்டம் தி.நகரில் இன்று நடைபெற இருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கத் தலைவராக இருந்து வருகிறார் தாணு. க்யூப் நிறுவனத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம், அக்டோபர் 23ம் தேதி முதல் படங்கள் வெளியீடு இல்லை, நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை இவருடைய தலைமையில் தான் தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது.

இந்நிலையில், தாணு முடிவின் மீது அதிருப்தியில் இருக்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கேற்கும் அவசரக் கூட்டம் இன்று காலை தி.நகரில் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிய போது, "தாணு முடிவின் மீது பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஏனென்றால் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார்.

ஏற்கனவே தொலைக்காட்சி உரிமையை யாருமே வாங்கமாட்டேன் என்கிறார்களே என்ற பயத்தில் இருக்கிறோம். அக்டோபர் 23ம் தேதி முதல் படங்கள் வெளியீடு இல்லை என்கிறார், அப்படி என்றால் பண முதலீடு செய்து படங்களைத் தயாரித்து வரும் நாங்கள் என்ன செய்வது?. இதனை நாங்கள் பலமுறை அவரிடம் கேட்டுவிட்டோம். எதற்குமே பதில் சொல்லாமல் இழுத்தடிக்கிறார். மேலும், நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி நிறைய உதவிகள் செய்திருக்கிறது, ஆகையால், தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு சரத் அணிக்கே என்கிறார்.

அன்றைய தினம் எனக்கு போன் செய்து, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் வாருங்கள் என்றார், நாங்களும் சென்றோம். அங்கு யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை. பத்திரிகையாளர்களிடம் சரத் அணிக்கு எங்கள் ஆதரவு என்கிறார். உறுப்பினர்கள் என்ற முறையில், சங்கத்தின் பதவியில் இருக்கும் எங்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டாமா?. ஒரு சங்கம் எப்படி இன்னொரு சங்கத்தின் தேர்தலில் தலையிட முடியும். அது கூட தெரியாத ஒருவர் தலைவராக இருக்கிறார்.

ஜெமினி நிறுவனத்துக்கு விஜய் கொடுத்த தேதியை வைத்து 'துப்பாக்கி' படத்தை தயாரித்தார். அதுமட்டுமன்றி தற்போது இரண்டு பெரிய நடிகர்களின் தேதிகள் எப்படி அவருக்கு கிடைத்தது?. என்ன கேட்டாலும் பொய் வாக்குறுதிகள் தான் சொல்வார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான் தி.நகரில் தாணுவின் மீது அதிருப்தியில் இருக்கும் தயாரிப்பாளர்களின் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். இதற்கு விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இக்கூட்டம் முடிந்தவுடன் முடிவுகள் குறித்து அறிவிப்போம். அப்படி வரும் அறிவிப்பில் அதிரடி முடிவுகள் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x