Published : 21 Oct 2015 12:18 PM
Last Updated : 21 Oct 2015 12:18 PM
யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் நேரடியாக சினிமா எடுக்கும் இயக்குநர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் நெல்சன் வெங்கடேசன். தினேஷ், மியா ஜார்ஜ், கருணாகரன் என்று இளம் நட்சத்திரங்களை வைத்து ‘ஒரு நாள் கூத்து’ என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலையில் இருந்தவரைச் சந்தித்தோம்.
படத்துக்கு ஏன் ‘ஒரு நாள் கூத்து’ என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?
‘ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு பரபரப்போடு ஓடியாட வேண்டியிருக்கே’ என்று ஒவ்வொரு திருமண வீட்டிலும் கூறுவார்கள். திருமணங்களை மையமாக வைத்து சுழலும் கதைக்களம்தான் இந்த ‘ஒரு நாள் கூத்து’. திருமணங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை கோர்த்து எடுத்ததால் இப்பெயரை வைத்தோம்.
படத்தில் தினேஷுக்கு 2 பேர் ஜோடியா?
நல்ல திரைக்கதை அதற்கான கதாபாத்திரங்களை தேடிக்கொள்ளும். அப்படித்தான் தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், கருணாகரன், ரித்விகா என்று ஒரு பட்டாளமே இந்தப்படத்தில் இயல்பாக கைகோர்த்தனர். ‘கதைக்கு பொருத்தமான கலைஞர்கள் அமைந்துவிட்டால் படத்தின் 50 சதவீத வேலை முடிந்தது மாதிரி’ என்று இயக்குநர் மணிரத்னம் கூறுவார்.
அப்படித்தான் இந்தப்படத்துக்கு கதாபாத்திரங்கள் பொருந்தினார்கள். திருமணம் தொடர்பான கதை என்பதால் பல கோணங்களை தொட வேண்டியிருந்தது. அதற்காக இந்தப்படத்துக்கு 2 நாயகிகள் தேவைப்பட்டார்கள். ஒவ்வொருவருடைய கதாபாத்திரமும் ஒவ்வொரு கோணத்தில் படத்தை முன்னெடுத்துச் செல்லும்.
வானொலியில் பணிபுரிந்த நீங்கள் எப்படி திரைப்பட இயக்குநராக மாறினீர்கள்?
வானொலியில் ஆர்.ஜே.வாக என் பயணத்தைத் தொடங்கி தலைமை நிகழ்ச்சி அமைப்பாளர் பதவி வரை அனுபவம் பெற்றுள்ளேன். அந்த அனுபவம்தான் என்னை இயக்குநராக உருவாக்கியது. திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவு மாணவனாக படிப்பை தொடங்கினேன். ஒன்றரை ஆண்டுகள்தான் படித்தேன். என் எண்ணம் முழுக்க திரைப்பட இயக்கத்தில் இருந் ததால் ஒளிப்பதிவு துறையில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.
யாரிடமும் உதவி இயக்குநராக பணி யாற்றவில்லை. படம் இயக்க நல்ல ரசனை இருந் தால்போதும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந் தேன். இயக்குநர் ஹரி ஒருமுறை, ‘உதவி இயக்கு நருக்கு கிராஃப்ட் எப்படி என்று ஒரு இயக்குநர் கற்றுக் கொடுக்க முடியுமே தவிர, கிரியேட்டிவிடியை கற்றுக் கொடுக்க முடியாது’ என்றார்.
அதேபோல செல்வராகவன், ‘படித்தவர்கள் சினிமா எடுக்க முன் வர வேண் டும்’ என்றார். இந்த மாதிரியான அனுபவமுள்ளவர் களின் பேச்சு, கூடவே இருக்கும் வாசிப்பு. இப்படியான விஷயங்கள்தான் என்னை நேரடியாக இயக்குநராக் கியது. இந்தப்படத்தில் என்னுடன் படித்த திரைப்பட கல்லூரி நண்பர்கள் பலர் பணிபுரிகிறார்கள். அது எனக்கு பெரிய பலமாக இருக்கிறது.
படம் எப்போது திரைக்கு வருகிறது?
இரண்டு நாட்களுக்கு முன் இசையை வெளியிட்டுள்ளோம். ‘பண்ணையாரும் பத்மினியும்’ பட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தேசிய விருதுபெற்ற சாபு ஜோசப் எடிட்டிங் வேலைகளை கவனித்து வருகிறார். படத்துக்கு ஒளிப்பதிவு கோகுல். இவர்கள் கூட்டணியில் விரைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. நவம்பர் இறுதியில் இப்படம் வெளிவர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இரண்டாவது படத்துக்கு தயாராகிவிட்டீர்களா?
ஒரு படத்தை முழுமையாக முடிப்பதற்குமுன் இரண்டாவது படத்தில் கவனம் செலுத்த வேண்டாம் என்று இருக்கிறேன். நிதானமாகத்தான் அடுத்தப் பட வேலைகளை தொடங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT