Published : 08 Nov 2020 05:43 PM
Last Updated : 08 Nov 2020 05:43 PM
தனது தந்தையின் மறைவை முன்னிட்டு, அவரைப் பற்றி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் ராய் லட்சுமி.
தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து முன்னணிப் படங்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இவருடைய தந்தை ராம் ராய்பாஹி உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.
தனது தந்தையின் மறைவை முன்னிட்டு ராய் லட்சுமி இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
"அப்பா நான் உங்களை மிஸ் செய்கிறேன். என்னால் இந்த இழப்பிலிருந்து எப்போதும் மீண்டு வரவே முடியாது. ஆனால் இந்த இழப்புடன் வாழக் கற்றுக் கொள்வேன். உங்களைப் போல என்னை யாராலும் நேசிக்க இயலாது அப்பா. என் அப்பா ‘இருந்தார்’ என்று நான் சொல்லும்போது என் இதயம் மிகவும் வலிக்கிறது.
உங்களை என்னுடன் இருக்க வைக்க என்னால் முடிந்த எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்தேன். ஆனால், என்னை மன்னித்து விடுங்கள். என்னால் உங்களைக் காப்பாற்ற இயலவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல நீங்கள் என்னோடு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் என் முதுகெலும்பாக இருந்தீர்கள் அப்பா. என் வாழ்வில் அனைத்து விஷயங்களையும் எனக்குக் கொடுத்தீர்கள். இதை விட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மகளுக்கு வேறு என்ன வேண்டும்?
எப்போதும் நான் சுதந்திரமாகவும், உறுதியாகவும் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில் ஒருநாள் உங்கள் இழப்பை நான் தாங்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், இவ்வளவு வலிமையுடன் நான் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்பதை நான் அறியவில்லை.
நீங்கள் இப்போது வலியில்லாத, மகிழ்ச்சியான ஒரு நல்ல இடத்தில் இருக்கிறீர்கள் என்பது என் மூளைக்குத் தெரிகிறது. இதை நான் என்னுடைய மனதுக்குப் புரிய வைக்க விரும்புகிறேன். நீங்கள் மேலே இருந்து எனக்குத் தேவையான வலிமையைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
நீங்கள் என்னை நம்பினீர்கள். உங்கள் குட்டிப் பெண் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றி உங்களுக்குப் பெருமை சேர்ப்பாள். தங்கத்திலான ஒரு இதயம் துடிப்பதை நிறுத்தும்போது, உழைத்த கரங்கள் ஓய்வெடுக்கும்போது அந்தத் தருணம் இருண்டதாகிறது. நீங்கள் வலியில் இருக்க வேண்டாம் என்று விரும்பி கடவுள் உங்களை அழைத்துக் கொண்டார்.
நீங்கள் இப்போதும் எங்களுடன் இருப்பதாகவே உணர்கிறோம். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் அப்பா. எங்கள் இதயங்களில் எப்போதும் உங்கள் மீதான நேசம் இருந்து கொண்டேயிருக்கும்".
இவ்வாறு ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT