Published : 07 Nov 2020 08:32 PM
Last Updated : 07 Nov 2020 08:32 PM
விஜய்யுடனான பிரச்சினை குறித்து அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட பேட்டி அளித்துள்ளார்.
'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சியொன்றைப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிக்கை, விஜய்யின் அம்மா ஷோபா பேட்டி ஆகியவற்றின் மூலம் விஜய் வீட்டில் பிரச்சினை வெடித்திருப்பது உறுதியானது.
தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக எஸ்.ஏ.சி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு விளக்கமாகப் பேசியுள்ளார்.
அதில் எஸ்.ஏ.சி கூறியிருப்பதாவது:
"இன்றைக்கு வரைக்கும் விஜய் எனக்குக் குழந்தைதான். அவருக்கு எது நல்லதோ அதைச் செய்து கொண்டிருக்கிறேன். என் உயிர் இருக்கும் வரை என் பிள்ளைக்காகச் செய்வேன். அதை அவரிடம் கேட்டுப் பண்ண வேண்டியதில்லை. ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும்போது, நான் அவரைக் கேட்கவில்லையே. அவருக்கு நான் கட்சி தொடங்கியதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். என் பிள்ளைக்கு நல்லது என நினைத்தே செய்கிறேன். அரசியல் விஷயங்களை எல்லாம் விஜய்யுடன் பேசிக் கொள்வதில்லை. அப்பா செய்தது நல்லது என்று கொஞ்ச நாள் கழித்து அவரே ஏற்றுக் கொள்வார் என்பது என் நம்பிக்கை.
விஜய்க்கு நான் கட்சி தொடங்கியதில் உடன்பாடு இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நேற்று கொடுத்த அறிக்கையை வைத்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா நமக்கு நல்லதுதான் செய்வார் என்பதை விஜய் புரிந்து கொள்வார். அதற்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
நான் விஜய்யிடம் 3 - 4 மாதங்களுக்கு ஒரு முறைதான் வழக்கமாகவே பேசுவேன். விஜய் அறிக்கை கொடுத்தவுடன் பேசினால் சரியாக இருக்காது. ஆகையால், கொஞ்ச காலம் கழித்துப் பேசவுள்ளேன்.
நான் அவருடைய புகைப்படத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை என்கிறார். என்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என நினைத்தால் அனுப்பட்டும். நான் நல்லது என்று நினைத்துச் செய்கிறேன். எதிர்விளைவு வரும் என நினைப்பதில்லை. அப்பா மீது மகன் நடவடிக்கை எடுத்தார் என்பது வரலாறுதானே. நான் இதுவரை ஆரம்பித்த எதிலுமே தோல்வியடைந்ததில்லை. எந்தவொரு நல்ல விஷயம் செய்தாலும் கடவுள் துணையிருப்பார். எனக்குக் கடவுள் விஜய்தான்.
'நான் ஒரு அரசியல் கட்சி தொடங்கவுள்ளேன். எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று நீ சொல்லிவிடு' என 10 ஆண்டுகளுக்கு முன்பே விஜய்யிடம் சொல்லிவிட்டேன். ஏனென்றால், எனக்கு அரசியலைப் பற்றி ஓரளவு தெரியும். மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லது பண்ண வேண்டும் என்பது என் எண்ணம். ஏனென்றால் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. அதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. படங்கள் மூலமாகச் சொல்லிப் பார்த்துவிட்டேன். எதுவும் மாற்றமில்லை. சரி நேரடியாகக் களத்தில் இறங்கிச் செய்வோமே என்றுதான் ஆரம்பித்துள்ளேன்.
விஜய் ரசிகர் மன்றம் என்பது என்னுடைய அமைப்பு. அதைத்தான் இப்போது கட்சியாக மாற்றியுள்ளேன். தேர்தலில் நிற்பதற்காகப் பதிவு செய்யவில்லை. இந்தக் கட்சிப் பதிவு பணிகள் தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றன. அவசரத்தில் இந்தக் கட்சியைப் பதிவு செய்யவில்லை. விஜய்யே சில காலத்தில் அப்பா நல்லதுதான் செய்துள்ளார் என நினைப்பார். அப்போது தொண்டர்களும் நினைப்பார்கள்.
கணவர் ஏதேனும் செய்யும்போது துணையாக இருக்க வேண்டும் என்பது அவருடைய கடமைதானே. ஆனால், ஷோபா விரும்பவில்லை என்றால் அவருக்குப் பதிலாக இன்னொருவரை அந்தப் பதவியில் போடுவேன். இன்றைய நிலையை வைத்துப் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் பாருங்கள்.
எந்தக் குடும்பத்தில்தான் அப்பா - மகன் சண்டையில்லை. ஒரு வருடம் பேசாமல் இருப்போம். பின்பு கட்டிப்பிடித்துக் கொள்வோம். அனைத்துக் குடும்பங்களிலும் இருப்பது மாதிரி என் குடும்பத்திலும் பிரச்சினை வந்தது. நான் ஒரு கெத்தான ஆள், அவர் ஒரு கெத்தான ஆள். இரண்டு கெத்தான ஆட்களுக்குள் பிரச்சினை வரும்தானே.
விஜய்க்குத் தெரியாமல் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அது உடையும் போது பல உண்மைகள் விஜய்க்குத் தெரியவரும். உண்மையை ரொம்ப நாட்களுக்குப் புதைத்து வைக்க முடியாது. பொய்யையும் ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது. அது உடையும் அன்று, அப்பா நமக்கு இவ்வளவு நன்மை செய்து கொண்டிருக்கிறாரா, கூட இருக்கிறவன் இப்படி குழி பறிச்சுட்டு இருக்கானா என்று தெரியவரும்போது அனைத்தும் சரியாகிவிடும்.
விஜய் நடிகனானவுடன் என் இயக்கத்தை விட்டுவிட்டு ஒரு மேலாளராக, ப்யூனாக கூடவே போய் வேலை செய்துள்ளேன். அவருக்காகவே இன்றைக்கு வரைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படியொரு அப்பா பிள்ளைக்குக் கிடைக்க மாட்டான், அப்படியொரு பிள்ளை அப்பாவுக்குக் கிடைக்க மாட்டான். அதையும் ஒப்புக் கொள்கிறேன்.
1% பிரச்சினை இருப்பதை வைத்துக்கொண்டு பல கேள்விகள் வருகின்றன. எனக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் நல்லவன். ஆகையால், நல்லவன் மாதிரி நடிக்க வேண்டிய அவசியமில்லை. விஜய்யிடம் வில்லன்கள் சிலர் நல்லவன் மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. விஜய் என்னை விட புத்திசாலி. அதை அவர் விரைவில் கண்டுபிடித்துவிடுவார்.
எனக்கு வயது 78. எப்போதுமே நான் பாசிட்டிவாகவே யோசிப்பேன். அதனால் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். விஜய் இப்போது ஒரு விஷ வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அவரை முதலில் வெளியே எடுக்க வேண்டும்.
என் கடமை என் பிள்ளையைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும். என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும். நான் வாழ்வது அவருக்காகத்தான். நான் செய்யும் ஒவ்வொரு காரியமும் விஜய்க்காக. நிச்சயமாக ஒரு நாள் அவருக்குப் புரியும்".
இவ்வாறு எஸ்.ஏ.சி பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT