Published : 06 Nov 2020 06:18 PM
Last Updated : 06 Nov 2020 06:18 PM
சிம்பு பாம்பு பிடிக்கும் காட்சி சர்ச்சையாகி இருப்பது தொடர்பாக, 'ஈஸ்வரன்' படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'ஈஸ்வரன்'. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தீபாவளிக்கு டீஸர் வெளியாகும் என்று சிம்பு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு 'ஈஸ்வரன்' படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பு பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகப் பரவியது. அதே வேளையில், இந்தக் காட்சி தொடர்பாக சமூக ஆர்வலர்ஒருவர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனால் சிம்பு படத்துக்கு மீண்டும் சிக்கல் என்கிற ரீதியில் செய்திகளும் வெளியாகின.
தற்போது பாம்பு பிடித்த காட்சி தொடர்பான சர்ச்சைக்கு, 'ஈஸ்வரன்' படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் படக்குழுவினர் கூறியிருப்பதாவது:
"சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'ஈஸ்வரன்' படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்துப் படமாக்கினோம்.
இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராபிக்ஸ் செய்யும்போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின்றோம்.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தைத் தெளிவுபடுத்தினோம். அதற்குண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளோம்.
படத்தின் முழுப் படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டுதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்"
இவ்வாறு 'ஈஸ்வரன்' படக்குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT