Published : 05 Nov 2020 11:31 AM
Last Updated : 05 Nov 2020 11:31 AM
'ஆரண்ய காண்டம்' படத்துக்கு 2 கிளைமேக்ஸ் காட்சிகளை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா எழுதி வைத்திருந்ததாகப் படத்தொகுப்பாளர்கள் பிரவீன் கேஎல், என்பி ஸ்ரீகாந்த் கூறியுள்ளனர்.
'ஆரண்ய காண்டம்' தமிழ்த் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வெளியீட்டின்போது வெற்றி பெறாமல் பின்னர் மக்களால் கொண்டாட்டப்பட்ட திரைப்படங்களில் ஆரண்ய காண்டத்துக்கும் ஒரு இடமுண்டு. இந்தத் திரைப்படத்தின் முதல் திரையிடலே தெற்காசிய சர்வதேசத் திரைப்பட விழாவில்தான் நடந்தது. அங்கு சிறந்த திரைப்படம் என்ற கிராண்ட் ஜூரி விருதைப் பெற்றது.
வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற 'ஆரண்ய காண்டம்' சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர்கள் பிரவீனும், ஸ்ரீகாந்தும் பேட்டி அளித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் - பிரவீன்
இதில் அவர்கள் பேசுகையில், "படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸ் காட்சிகளை தியாகராஜன் குமாரராஜா எழுதி வைத்திருந்தார். சுப்பு கதாபாத்திரம் லாரியில் அடிபட்டு இறப்பது போன்ற ஒரு முடிவையும் நாங்கள் யோசித்து வைத்தோம். ஆனால், குமாரராஜா முதலில் எழுதிய கிளைமேக்ஸையே படத்தில் வைத்தார். லாரியில் அடிபடுவது போல வைத்திருந்தால் ரசிகர்களுக்கு அந்த உற்சாகம் கிடக்காமல் போயிருக்கும்.
படத்தின் அடிப்படைக் கருத்து, பலவீனமான ஒரு நபர் கீழிருந்து மேலே வந்து வெற்றி பெறுவதுதான். அதனால்தான் நான் குமாரராஜாவிடம் ‘சுப்பு சூரிய அஸ்தமனத்தை நோக்கி நடப்பது போல ஒரு காட்சி வைப்போம்’ என்றேன். அப்படி வைத்த காட்சியில் அந்த சூரிய அஸ்தமனம் என்பது நாங்கள் படத்தொகுப்பின்போது செயற்கையாக சேர்த்தது" என்று கூறியுள்ளனர்.
'ஆரண்ய காண்டம்' வெளியான 9 வருடங்கள் கழித்தே தியாகராஜன் குமாரராஜா 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை இயக்கினார். ஆரண்ய காண்டத்தைப் போலவே சூப்பர் டீலக்ஸுக்கும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகள், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் கிடைத்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT